தமிழகத்தில் 10 மாவட்டங்களில் பா.ஜ.க அலுவலகம் திறப்பு: மேலும் 39 இடங்களில் கட்டப் போவதாக ஜெ.பி.நட்டா அறிவிப்பு..!

பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி நட்டா நேற்று (வெள்ளிக்கிழமை) தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கட்டப்பட்ட கட்சி அலுவலகத்தை திறந்து வைத்தார்.

தொடர்ந்து புதுக்கோட்டை, திருச்சி, தூத்துக்குடி, விருதுநகர், தேனி, தருமபுரி, நாமக்கல், விழுப்புரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் கட்டப்பட்ட பா.ஜ.க அலுவலகங்களை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். தமிழகத்தில் மேலும் 39 அலுவலகங்கள் கட்டப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

கிருஷ்ணகிரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய இணையமைச்சர் எல். முருகன், கோவை தெற்கு எம்.எல்.ஏ.வும், கட்சியின் தேசிய மகளிர் அணித் தலைவருமான வானதி சீனிவாசன் மற்றும் மூத்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய நட்டா, பாஜகவுக்கு இது ஒரு வரலாற்று நாள் என்று கூறினார். இதற்கு முன்பு எப்போதும் ஒரே நேரத்தில் 10 அலுவலகங்கள் திறக்கப்பட்டது இல்லை. நாடு முழுவதும் 887 மாவட்டங்களில் கட்சி அலுவலகங்களை திறக்க பாஜக திட்டமிட்டுள்ளது. இதில் 290 அலுவலகங்கள் கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளது என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் 14 இடங்களில் பாஜக அலுவலகங்கள் உள்ளன. மேலும் 39 அலுவலகங்கள் கட்டப்படும். தற்போது கிருஷ்ணகிரியில் கட்டப்பட்டுள்ள அலுவலகம் அதிநவீன வசதிகளை கொண்டுள்ளது என்றார்.

நட்டா மேலும் கூறுகையில்,’தமிழ்நாட்டிலும் தாமரை மலர்ந்தே தீரும். பா.ஜ.க மட்டும் தான் குடும்ப அரசியலை ஒழிக்க முடியும். தமிழகத்திற்கு பாஜக தலைமையிலான மத்திய அரசின் நிறைய திட்டங்களை செய்துள்ளது. 40 ஆண்டுகளுக்கு பிறகு மத்திய ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்தின் ஒன்பது திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முதன்முறையாக 1,500 கலைஞர்கள் பங்கேற்ற காசி தமிழ் சங்கமம் நடைபெற்றுள்ளது. தமிழ்நாட்டின் செழுமையான கலாச்சாரத்தை நாடு அறிய வேண்டும் என்று எப்போதும் மோடி கூறுவார்.

வட இந்தியாவில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் திருக்குறள் கற்று தரவேண்டும் என மோடி அறிவுறுத்தி உள்ளார். பிரதமர் மோடி தமிழ் இலக்கியத்தை மிகவும் மதிக்கிறார், வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தனது உரைகளில் சிறந்த தமிழ் கவிஞர்கள், அறிஞர்களை மேற்கோள் காட்டத் தவறுவதில்லை’ என்றார்.

இப்போது எல்லாம் மாநில கட்சிகள் குடும்ப கட்சிகளாக மாறிவருகிறது. நான் ஏற்கனவே கூறியது போல் தி.மு.க என்றால் குடும்பம், பணம் , கட்ட பஞ்சாயத்து தான். தற்போது முதலமைச்சரின் மகன் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்றுள்ளார். இவர்கள் மக்களை கவனிக்க மாட்டார்கள். வாரிசு அரசியலால் மாநில கட்சிகள் சுருங்கி வருகிறது. பா.ஜ.க மட்டுமே வளர்ச்சி அடைந்து வருகிறது என்று கூறினார்.