கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்கும் OPEC+ நாடுகள்.. இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கும் அபாயம்..!

ச்சா எண்ணெய் விலை சப்ளை டிமாண்ட் அடிப்படையில் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும்.

கடந்த 3 மாதமாகச் சர்வதேச பொருளாதார மந்த நிலையில், அமெரிக்கா உட்பட உலக நாடுகளின் வட்டி விகித உயர்வு, விலைவாசி உயர்வு ஆகியவற்றின் காரணமாகக் கச்சா எண்ணெய் தேவை படிப்படியாகக் குறைந்து வந்தது மட்டும் அல்லாமல் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 120 டாலரில் இருந்து 90 டாலர் வரையில் குறைந்தது.

இந்த நிலையில் தற்போது OPEC+ அமைப்பில் இருக்கும் கச்சா எண்ணெய் உற்பத்தி நாடுகள் அதன் உற்பத்தி அளவை குறைக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

2020 கொரோனா தொற்றுக்குப் பின்பு வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி அடைந்து வந்த நிலையில் OPEC+ அமைப்பில் உள்ள நாடுகள் தொடர்ந்து அதிகளவிலான கச்சா எண்ணெய்-யை சந்தையின் டிமாண்டுக்கு ஏற்ப உற்பத்தி செய்து வந்தது.

இந்த நிலையில் 2020 பின்பு OPEC+ அமைப்பு கச்சா எண்ணெய் விலையை உயர்த்திக் கூடுதல் வருமானத்தைப் பார்க்க வேண்டும் என்பதற்காகக் கச்சா எண்ணெய் உற்பத்தியை ஒரு நாளுக்கு 2 மில்லியன் பேரல் குறைக்க முடிவு செய்துள்ளது.

அமெரிக்கா OPEC+ அமைப்புக்கு கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க வேண்டாம், இது தங்கள் பொருளாதாரத்திற்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கோரிக்கை வைத்த நிலையிலும் OPEC+ அமைப்பு உற்பத்தியை குறைக்க முடிவு செய்துள்ளது. இதனால் உலகம் முழுவதும் கச்சா எண்ணெய் விலை உயரும் நிலை உருவாகியுள்ளது.

கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால் மீண்டும் அனைத்து நுகர்வோர் பொருட்கள் முதல் எரிசக்தி விலை வரையில் அனைத்தும் உயர்வும். இதனால் உலக நாடுகளில் மீண்டும் தீவிரமான விட்டி விகித உயர்வை அறிவிக்க வேண்டி வரும்.

ஆனால் இந்தத் திடீர் மாற்றத்தை எதிர்கொள்ள அமெரிக்க உட்பட அனைத்து நாடுகளும் அடுத்த சில நாட்களுக்குத் தங்களது இருப்பில் இருந்து அதிகப்படியான கச்சா எண்ணெய்யைச் சந்தைக்குக் கொண்டு வரும், ஆனால் அதன் விலை உயர்வைக் கட்டுப்படுத்த முடியாது.

இதனால் இந்தியா பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைக்கும் என்ற எதிர்பார்ப்பு குறைந்துள்ளது. மேலும் இந்தியா வாங்கும் கச்சா எண்ணெய் விலை OPEC+ அமைப்பின் கச்சா எண்ணெய் உற்பத்தி குறைப்பால் விலை அதிகமானால் பெட்ரோல், டீசல் மற்றும் விமான எரிபொருள் விலை அதிகரிக்கவும் வாய்ப்புகள் அதிகம்.