வெறும் 37,974 ஓட்டுக்கள் தான்.. இமாச்சல பிரதேசத்தில் தாமரை மலராமல் போனதற்கு காரணம்..!

சிம்லா: இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தலில் தோல்வியடைந்த பாஜக, காங்கிரஸ் கட்சியிடம் ஆட்சியை இழந்துள்ளது.

இந்த தேர்தலில் வெறும் 37,974 ஓட்டுக்களே மாநிலத்தில் மீண்டும் பாஜகவின் தாமரையை மலரவிடாமல் தடுத்து ஆட்சி கட்டிலில் இருந்து அகற்றி காங்கிரஸ் கட்சிக்கு கைக்கொடுத்து இருப்பது தெரியவந்துள்ளது.

இமாச்சல பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடந்தது. ஜெய்ராம் தாகூர் முதலமைச்சராக இருந்தார். 5 ஆண்டுகுள் முடிவடைந்த நிலையில் இமாச்சல பிரதேச மாநிலத்துக்கு கடந்த மாதம் 12ம் தேதி சட்டசபை தேர்தல் நடந்தது.

மொத்தமுள்ள 68 சட்டபை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக அன்றைய தினம் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க 35 தொகுதிகளில் வெற்றி பெற முடியும். அதன்படி நேற்றைய தேர்தலில் கருத்து கணிப்புகளை தாண்டி காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சி மொத்தம் 40 தொகுதிகளிலும், பாஜக 25 இடங்களிலும், சுயேச்சைகள் 3 தொகுதிகளிலும் வெற்றி பெற்றனர். இதன்மூலம் இமாச்சல பிரதேசத்தில் பாஜக ஆட்சியை இழந்துள்ளது. அங்கு மீண்டும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது.

இமாச்சல பிரதேசம் பாஜகவின் தேசிய தலைவர் ஜேபி நட்டாவின் சொந்த மாநிலமாகும். இதனால் அவர் தான் தேர்தல் வியூகங்களை வகுத்து செயல்பட்டு வந்தார். இருப்பினும் பாஜக கட்சி தேர்தலில் தோல்வியடைந்து ஆட்சியை பறிகொடுத்துள்ளது. இதனால் ஜேபி நட்டா உள்பட பாஜக மேலிடம் ஷாக்கில் உள்ளது. மேலும் தோல்விக்கான காரணம் பற்றி ஆராய்ந்து வருகிறது.

இந்நிலையில் தான் இமாச்சல பிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சியை காங்கிரஸிடம் இழந்தது பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி இமாச்சல பிரதேச மாநிலத்தில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை என்பது 55 லட்சத்து 74 ஆயிரத்து 793 ஆக தான் உள்ளது. இதில் தேர்தலில் பதிவான ஓட்டுகளில் மொத்தமாக காங்கிரஸ் கட்சி 18 லட்சத்து 52 ஆயிரத்து 504 ஓட்டுக்கள் பெற்று 40 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 43.9 சதவீத ஓட்டுக்களை பெற்றுள்ளது. அதேவேளையில் 25 இடங்களில் வெற்றி பெற்ற பாஜக கட்சி 18 லட்சத்து 14 ஆயிரத்து 530 ஓட்டுக்களை பெற்றுள்ளது. இது 43 சதவீத ஓட்டுக்களாகும்.

இதன்மூலம் பாஜக கட்சி வெறும் 0.9 சதவீத ஓட்டுக்கள் வித்தியாசத்தில் காங்கிரஸ் கட்சியிடம் ஆட்சியை பறி கொடுத்துள்ளது. இன்னும் புரியும் படி கூற வேண்டும் என்றால் இமாச்சலில் பாஜகவை விட காங்கிரஸ் கட்சி வெறும் 37 ஆயிரத்து 974 ஓட்டுக்களை மட்டுமே அதிகம் பெற்று ஆட்சி அரியனையில் அமர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இமாச்சல் வரலாற்றில் ஒரு கட்சி இவ்வளவு குறைந்த ஓட்டு சதவீதத்தில் ஆட்சி அதிகாரத்தை பறிகொடுப்பது இதுதான் முதல் முறையாகும்.

முன்னதாக கடந்த 2017 ல் நடந்த சட்டசபை தேர்தலில் பாஜக 48.79 சதவீத ஓட்டுக்கள் பெற்று 44 இடங்களில் வெற்றியை பதிவு செய்து ஆட்சியை பிடித்தது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 21 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று ஆட்சியை இழந்தது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கும், பாஜகவுக்கு இடையேயான ஓட்டு சதவீதம் என்பது 7.11 சதவீதமாக இருந்தது. அதாவது காங்கிரஸ் கட்சியை விட 7.11 சதவீத ஓட்டுக்கள் பெற்று பாஜக ஆட்சியில் அமர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.