மீண்டும் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா – மீண்டும் ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம்..!

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இரண்டு நாள் பயணமாக டெல்லி செல்கிறார்.

அதே நேரத்தில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையும் இன்று டெல்லி செல்கிறார். இன்று சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா மீண்டும் தாக்கலாக உள்ள நிலையில் டெல்லி பயணம் மேற்கொள்கிறார். இருவரும் ஒரே நாளில் டெல்லிக்கு செல்வதால் தமிழக அரசியலில் அடுத்த மாற்றம் என்னவாக இருக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதேநேரத்தில் இன்று காலை பாநாயகர் அப்பாவு தலைமையில் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது. மறைந்த சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மறைந்த பாடகி வாணி ஜெயராம் ஆகியோருக்கு இரங்கள் தெரிவிக்கப்பட்டதும், ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா மீண்டும் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த மசோதாவை சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்கிறார்.

சூதாட்டங்களை தங்களது வரம்பிற்கு கொண்டு வர தேவையான சட்டங்கள் இயற்ற மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது. அதேபோல பந்தயம், சூதாட்டம் இரண்டும் அரசமைப்பின் ஏழாவது அட்டவணையின் கீழ் வருகிறது என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ள நிலையில், இன்று மீண்டும் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா தாக்கல் செய்யப்படுகிறது.

– அதிமுக ஆட்சியில் கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதித்து அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது.

– அதனைத்தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு பிப்ரவரியில் சட்டப்பேரவையில் சட்டம் இயற்றப்பட்டது.

– இதனை எதிர்த்து ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்தன.

– உரிய முறைப்படுத்தும் விதிகள் இல்லாமல் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு ஒட்டு மொத்தமாக தடை விதிக்க முடியாது என வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் சட்டத்தை ரத்து செய்தது.

– உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி சந்துரு தலைமையில் ‘ஆன்லைன் சூதாட்டம்’ தொடர்பான குழு நியமிக்கப்பட்டது.

– கடந்தாண்டு ஜூன் 27 ஆம் தேதி முன்னாள் நீதிபதி சந்துரு தலைமையிலான குழு தங்கள் அறிக்கையை சமர்பித்தது.

– திமுக அரசு சார்பில் கடந்த செப்டம்பர் 26 ஆம் தேதி அவசர சட்டதிற்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

– இந்த அவசர சட்டத்திற்கு கடந்த ஆண்டு அக்டோபர் 1 ஆம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார்.

– ஆளுநர் ஒப்புதல் வழங்கிய நிலையில், அவசர சட்டம் கடந்த அக்டோபர் 3 ஆம் தேதி அரசிதழில் வெளியிடப்பட்டது.

– அதன்பிறகு அக்டோபர் 19ம் தேதி சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.

– சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாவுக்கு கையெழுத்திடாமல் ஆளுநர் காலம் தாழ்த்தினார்.

– கடந்த 8 ஆம் தேதி ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதிக்கும் மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பினார்.

– இந்த மசோதாவை நிறைவேற்ற தமிழக சட்டப்பேரவைக்கு அதிகாரம் இல்லை என்று ஆளுநர் குறிப்பிட்டிருந்தார்.