சென்னை: ஓணம் பண்டிகை வரும் 8ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
கேரளாவில் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதத்தில் வரும் திருவோணம் நட்சத்திரத்தைக் கேரள மக்கள் ஓணம் பண்டிகையாக வெகு விமர்சையாக கொண்டாடுகிறார்கள்.
அஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம் என மொத்தம் 10 நட்சத்திரங்கள் வரும் 10 நாட்களும் ஓணம் கொண்டாடப்படுகிறது.
கேரளாவில் ஓணம் பண்டிகை மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும். ஓணம் திருநாளில் மகாபலி பூவுலகுக்கு வருவதாக அம்மாநில மக்கள் நம்புகின்றனர். இதற்காக அவரை வரவேற்கும் வகையில் மொத்தம் 10 நாட்களுக்கு இந்த ஓணம் பண்டிகையை அவர்கள் கொண்டாடுகின்றனர். மக்களைக் காண வரும் மன்னன் மகாபலியை வண்ண மலர்களால் கோலமிட்டு வரவேற்பார்கள்.
கேரளாவில் மட்டுமின்றி கேரள மக்கள் வசிக்கும் அனைத்து பகுதிகளிலும் இந்த ஓணம் பண்டிகை கொண்டாடப்படும். தமிழ்நாட்டிலும் கேரள மக்கள் அதிகம் வசிக்கும் கோவை, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் ஓணம் கொண்டாடப்படும். இதற்காக அந்தந்த மாவட்டங்களில் விடுமுறையும் அளிக்கப்படும். ஏற்கனவே, சென்னை, கோவை, நீலகிரி, திருப்பூர், கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓணம் பண்டிகைக்காக உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்தச் சூழலில் மேலும் நான்கு மாவட்டங்களுக்கு வரும் செப். 8ஆம் தேதி ஓணம் பண்டிகையை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. அதன்படி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ஈரோடு மாவட்டங்களில் ஓணம் பண்டிகைக்காக உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் மொத்தம் 9 மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழக கேரள எல்லையில் உள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்கனவே ஓணம் பண்டிகை களைக்கட்டத் தொடங்கிவிட்டது. பொதுமக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் கோலமிட்டும், தெருக்களில் ஊஞ்சல் கட்டியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். அதேபோல குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்குக் கொண்டு செல்லப்படும் பூக்களின் அளவும் பல மடங்கு அதிகரித்து உள்ளது. அதைத் தாண்டி பூவுக்கான தேவை அதிகரித்து உள்ளதால், விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது.