மதுரை : சிவகங்கையில் எடப்பாடி பழனிசாமி அணி சார்பில் சனிக்கிழமை (மார்ச் 11) பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்ட நிலையில், மற்றொரு இடத்தில் ஓபிஎஸ் அணி ஆர்ப்பாட்டம் நடத்த உயர் நீதிமன்ற மதுரை கிளை அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.
ஒரே நாளில் சிவகங்கையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பொதுக்கூட்டமும், ஓபிஎஸ் தலைமையில் ஆர்ப்பாட்டமும் நடைபெறுவதற்கு இரு தரப்பும் தனித்தனியாக அனுமதி கேட்டு மனு அளித்திருந்தனர்.
இந்த வழக்குகளை விசாரித்த ஐகோர்ட் மதுரை கிளை, சிவகங்கை டி.எஸ்.பி முடிவெடுத்து அறிவிக்க உத்தரவிட்டது. அதன்படி ஓபிஎஸ் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டது. அதேசமயம் ஈபிஎஸ் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டது.
இதையடுத்து, ஓபிஎஸ் தரப்பு மீண்டும் வழக்கு தொடர்ந்த நிலையில், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என உறுதிமொழி பத்திரம் வழங்கிவிட்டு, ஆர்ப்பாட்டத்தை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஓ.பன்னீர்செல்வம் அணியின் சிவகங்கை மாவட்ட செயலாளராக இருக்கும் கே.ஆர்.அசோகன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், “முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப்பின் 2017ஆம் ஆண்டு ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக கட்சி வழிநடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் 2022ஆம் ஆண்டு ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய பதவிகளை ரத்து செய்துவிட்டு அதிமுக கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கு எதிராக உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் உள்ளது.
அதிமுக கட்சியின் தலைமை குழப்பத்தினால் தற்போது நடைபெற்ற ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. இதனால், அதிமுக சிவகங்கை மாவட்ட கட்சி உறுப்பினர்கள், மூத்த தலைவர்கள் ஒன்றிணைந்து ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் கட்சியில் இருக்கும் மோதல்களை தவிர்ப்பதற்காக சிவகங்கை அரண்மனை வாசல் முன் நாளை மார்ச் 11ஆம் தேதி காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்து அனுமதி கோரி சிவகங்கை மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தோம். ஆனால் அதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. எனவே, ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனு உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி இளங்கோவன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. நாளை சிவகங்கை மாவட்டத்தில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்ளும் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதிமுகவில் இரு தரப்பினரிடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி வருகையை கண்டித்து ஓபிஎஸ் அணி சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டள்ளன. இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் கலந்து கொள்ளும் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்கினால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
ஓபிஎஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கே.செல்லப்பாண்டியன் வாதிடுகையில், ஓ.பன்னீர்செல்வம் அணியினருக்கு சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அல்லது சந்திரா பூங்கா அருகே காலை 11 மணி அளவில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரியுள்ளோம். நாங்கள் ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி கோரிய இடமும், எடப்பாடி பழனிசாமி அணியினர் நடத்தும் பொதுக்கூட்டம் நடைபெறும் இடமும் வேறு. இதனால் ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கோரினார்.
இதையடுத்து, நீதிபதி இளங்கோவன், மனுதாரரிடம் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என உறுதிமொழி பத்திரம் வாங்கிக்கொண்டு, நிபந்தனைகளின் அடிப்படையில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்க வேண்டும் என சிவகங்கை துணை காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டார். ஒரே நாளில் ஈபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் சிவகங்கையில் நடைபெறும் கூட்டங்களில் பங்கேற்க இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.