ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் மறைவு – டிடிவி தினகரன் இரங்கல்..!

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் வயது முதிர்வு காரணமாக உடல்நல குறைவு ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து தேனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று இரவு உடல்நிலை மிகவும் மோசமானது.

இதனை அடுத்து மருத்துவமனையில் இருந்து அவரை பெரியகுளத்தில் உள்ள இல்லத்திற்கு குடும்பத்தினர் அழைத்துச் சென்றனர். பின்னர் நேற்று இரவு 10:20 மணியளவில் அவர் காலமானார். பழனியம்மாள் இறப்பு குறித்து அறிந்த ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் இருந்து பெரிய குளத்திற்கு புறப்பட்டு சென்றார்.

இந்த நிலையில் ஓபிஎஸ் தாயார் பழனியம்மாள் இறப்புக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் “முன்னாள் முதலமைச்சரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான திரு ஓ பன்னீர்செல்வம் அவர்களின் தாயார் பழனியம்மாள் காலமான செய்தி அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

அவரது மறைவால் வாடும் திரு ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது சகோதரர் உள்ளிட்ட உறவினர்கள் குடும்பத்தினர் நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.