தமிழ்நாட்டிலும் என்.பி.ஆர். கணக்கெடுப்பா… முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார் – அமைச்சர் செஞ்சி கே.மஸ்தான் உறுதி..!

திருச்சி: மத்திய அரசின் என்.பி.ஆர். கணக்கெடுப்பு காரணமாக தமிழ்நாடு மக்கள் பாதிக்காத வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரிய பாதுகாப்பு நடவடிக்கை எடுப்பது உறுதி தமிழ்நாடு சிறுபான்மை நலத்துறை மற்றும் வெளிநாடுவாழ் தமிழா் நலத்துறை அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் தெரிவித்து உள்ளார்.

திருச்சியில் கலாச்சார நட்புறவு கழக தமிழ் மாநில மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது. இதில் தமிழ்நாடு சிறுபான்மை நலத்துறை மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு பேசினார்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “போலியான ஆள் சோப்பு நிறுவனங்களை நம்பியும், போலி வாக்குறுதிகளை நம்பியும் எந்த விதமான உறுதிப்படுத்தலும் இல்லாமல் தமிழக இளைஞா்கள் பலரும் வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்கின்றனா்.

அங்கு, தாங்கள் விரும்பிய வேலை கிடைக்காமல் வேறு கட்டாய வேலைக்கும், சட்ட விரோத செயல்களுக்கும் ஈடுபடுத்தப்படுவதால் பாதிக்கப்படும் நிலை உருவாகிறது. அந்த வகையில் மியான்மரில் சிக்கிய இளைஞா்களை மீட்டு பெற்றோா்களிடம் ஒப்படைக்க தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் உரிய நடவடிக்கை எடுத்தாா்.

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் கம்போடியா, மியான்மரிலிருந்து 64 போ மீட்கப்பட்டுள்ளனா். மேலும், இதுவரை பல்வேறு நாடுகளில் இருந்து 1,200 தமிழா்கள் மீட்கப்பட்டுள்ளனா். வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடியாக இயங்கும் நிறுவனங்கள், நபா்கள் மீது தமிழக காவல்துறையும், அரசும் உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது.

திருச்சியில் 2 போ மீது காவல்துறையால் குண்டா் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வேலையில்லாத இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தர வேண்டும் என்பதற்காகவே தனியாா் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி வருகிறோம். இதுவரை 1 லட்சம் பேருக்கு மேல் வேலை வழங்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தால் வெளிநாடுகளில் உரிய சட்டப் பாதுகாப்புடன் வேலை வழங்கப்படுகிறது. 121 பேருக்கு அண்மையில் வேலை பெற்று பாதுகாப்புடன் வெளிநாடுகளில் பணிபுரியும் நிலை உருவாக்கித் தரப்பட்டு இருக்கிறது. இதேபோல, இங்கிலாந்தில் 500 செவிலியா்களுக்கு பணி கிடைக்கும் வகையில் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு, தோவானவா்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த பயிற்சி முடிந்தவுடன் அவா்கள் இங்கிலாந்து சென்று பாதுகாப்புடன் பணிபுரிய உள்ளனா். மேலும், மாலத்தீவில் கட்டுமானப் பணியிடங்களுக்கு 2 ஆயிரம் தொழிலாளா்கள் பணியமா்த்தப்பட உள்ளனா். இதற்காக மாலத்தீவுக்கு நேரில் சென்று அங்குள்ள நிறுவனத்தை பாா்வையிட்டு, அதன் தொழிலாளா் பாதுகாப்பு சட்டங்கள் குறித்து ஆராய்ந்து ஒப்பந்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி), தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்பிஆா்) ஆகியவற்றின் மீது தமிழக அரசு தனது எதிா்ப்பை முழுமையாக பதிவு செய்துள்ளது. எத்தகைய வேறுபாடுகளுக்கும், பாகுபாடுகளுக்கும் இடம் அளிக்காத இந்தியாவில் இத்தகைய நடைமுறைகள் ஒத்துவராது என தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

எனவே, மத்திய அரசின் இந்த கணக்கெடுப்பு காரணமாக தமிழக மக்கள் பாதிக்காத வகையில் முதல்வா் மு.க. ஸ்டாலின் உரிய பாதுகாப்பு நடவடிக்கை எடுப்பது உறுதி.” என்று அவர் கூறினார். கடந்த சில நாட்களுக்கு முன் மத்திய உள்துறை அமைச்சக ஆண்டறிக்கையில் என்பிஆர் மீண்டும் புதுப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.