டெல்லியில் உள்ள அம்பேத்கர் சர்வதேச மையத்தில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பாஜகவின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா மற்றும் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “டாக்டர் அம்பேத்கரின் பிறந்த நாள் ஏப்ரல் 14ம் தேதி வருகிறது. இதனை முன்னிட்டு வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை சமூக நீதிக்காக அர்ப்பணிக்கப்பட்ட நாட்கள் என்ற ஒரு பிரச்சாரத்தின் பகுதியாக, சமூக நிதி தொடர்பான கூட்டங்கள் மற்றும் மாநாடுகளை நடத்த வேண்டும்.
மேலும், மத்திய அரசின் நலத்திட்டங்கள் குறித்து விழிப்புணர்வை நாட்டு மக்களிடம் ஏற்படுத்த வேண்டும், இதில் குறிப்பாக பட்டியலின மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு, மத்திய அரசு செயல்படுத்தி வரும் நல்ல திட்டங்களை எடுத்துரைக்க வேண்டும்” என்று பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
மேலும், ஏழை மக்களுக்கு இலவசமாக உணவு பொருட்களை ரேஷன் கடைகள் மூலம் வழங்கும் பிரதம மந்திரி கரிப் கல்யாண் யோஜனா திட்டத்தை தொடர்ந்து நீடிப்பதற்கும், செயல்படுத்துவதற்கும் இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக, நாடாளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சர் அர்ஜூன் ராம் தகவல் தெரிவித்துள்ளார்.