வடமாநிலத்தில் இருந்து வந்து தமிழ்நாட்டில் பணி செய்யும் தொழிலாளர்கள் பாதுகாப்பாகவும் அற்புதமாகவும் உள்ளார்கள் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த வேலம்பட்டி எம்.ஜி.ஆர்.நகர் பகுதியை சேர்ந்த இராணுவ வீரர் பிரபு குடும்பத்தார் மீது நாகோஜனஹள்ளி பேரூராட்சி கவுன்சிலர் தாக்குதல் நடத்தியதில் பிரபு உயிரிழந்தார். இந்நிலையில் பிரபுவின் குடும்பத்தாரை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சந்தித்து ஆறுதல் கூறியதோடு ரூபாய் பத்து லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை கூறுகையில், வடமாநிலத்தில் இருந்து வந்து தமிழ்நாட்டில் பணி செய்யும் தொழிலாளர்கள் பாதுகாப்பாகவும் அற்புதமாகவும் உள்ளார்கள். அவர்களுக்கு தமிழக மக்களும் காவல்துறையினரும் உரிய பாதுகாப்பு ஒத்துழைப்பு அளிக்கிறார்கள் என்று தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், பழைய வீடியோக்களை சமூக வலைதளங்களில் பரப்பி விட்டு சிலர் தமிழ்நாட்டு மக்களுக்கு அவப்பெயரை ஏற்படுத்த முயற்சி செய்கிறார்கள். பீகார் மாநில பாஜக தலைவர் வட மாநில தொழிலாளர்கள் பாதுகாப்பை குறித்து விளக்கம் கேட்டார் அனைவரும் பாதுகாப்புடன் இருக்கிறார்கள் என உறுதி அளித்து உள்ளேன். இந்த விஷயத்தில் மாநில அரசுக்கும் காவல்துறைக்கும் பாஜக முழு ஒத்துழைப்பு அளிக்கும். வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.