வடகிழக்கு பருவமழை வருகிற 20-ந் தேதி தொடங்குவதற்கான வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்கள் தென்மேற்கு பருவமழையின் போது தான் அதிகப்படியான மழை பெறுகின்றன. ஆனால் தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களுக்கு வடகிழக்கு பருவமழை தான் அதிக மழைப்பொழிவை தருகிறது. இந்நிலையில், வடகிழக்கு பருவமழை வருகிற 20-ந் தேதி தொடங்குவதற்கான வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மைய இயக்குனர் மிருத்யுஞ்சய் மொகபத்ரா கூறியதாவது:- வடகிழக்கு பருவ மழை வருகிற 20-ந் தேதி தொடங்குவதற்கான சாதகமான சூழல் உருவாகி வருகிறது. இந்தியாவில் வடகிழக்கு பருவமழை இயல்பாக இருக்கும். 88 சதவீதம் முதல் 112 சதவீதம் வரை சராசரி மழை பெய்யக் கூடும். சராசரியாக இந்த வடகிழக்கு பருவத்தில் 3 சூறாவளி புயல்கள் காணப்படுகின்றன. ஆனால் இந்த ஆண்டு வங்காள விரிகுடாவில் நிலவும் லாநினா மற்றும் எதிர்மறை இந்திய பெருங்கடல் இருமுனை நிலைமைகள் காரணமாக அதிக மற்றும் தீவிரமான புயல்கள் உருவாகும் வாய்ப்பு உள்ளது. வானிலை மாதிரிகளின் அடிப்படையில் வட ஆந்திரா, மேற்கு வங்காளம், ஒடிசா, மற்றும் வங்கதேசம் அருகே புயல்கள் கரையை கடக்கும் வாய்ப்புகள் உள்ளன. புயல்கள் தமிழகத்தை தாக்குவதை விட இந்த பகுதிகளை அதிகமாக தாக்க வாய்ப்பு உள்ளது. வார இறுதியில் வங்க கடலில் புதிய புயல்கள் சுழற்சி உருவாகும். இவ்வாறு கூறினார்.