தொழிலதிபர்களை எந்த ரவுடியும், மாஃப்பியாவும் மிரட்ட முடியாது- உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவிப்பு..!

க்னோ: உத்திர பிரதேசத்தில் இனி எந்த ரவுடியும் தொழிலதிபர்களை மிரட்ட முடியாது என முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

பிரதமரின் மித்ரா திட்டத்தின் கீழ் லக்னோ மற்றும் ஹர்டோய் பகுதிகளில் ஜவுளி பூங்கா அமைக்கப்பட உள்ளது. இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மாநிலத்தில் எந்தவொரு ரவுடியும், மாஃப்பியாவும் தொழிலதிபர்களை இனி செல்போனில் மிரட்ட முடியாது என்று தெரிவித்தார். உத்தர பிரதேசத்தின் ஒருசில மாவட்டங்களின் பெயரை கேட்டாலே மக்கள் அச்சமடைந்த வந்த நிலை மாறி தற்போது அமைதியான சூழல் நிலவுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இது தொழிற்சாலைகளை தொடங்கி முதலீடு செய்வதற்கான சாதகமான வாய்ப்பு என்றும் அவர் தெரிவித்தார். வலுவான சட்டம் மற்றும் ஒழுங்கு எற்பாட்டிற்கு மாநில உத்தரவாதம் அளிப்பதாகவும் யோகி ஆதித்யநாத் கூறினார். இதனிடையே உ.பி. முன்னாள் எம்.எல்.ஏ-வும், தாதாவுமான அத்திக் அஹமது சுட்டு கொல்லப்பட்ட பின்னர் மாநிலத்தில் பல்வேறு வழக்குகளில் தொடப்பட்டு வரும் 61 மாஃப்பியாக்களின் பட்டியலை போலீசார் தயாரித்து அவர்களின் ரூ.500 கோடி மதிப்பிலான சொத்துக்களையும் முடக்கி உள்ளனர்.