ஊழல் செய்பவர்கள் எவ்வளவு சக்தி வாய்ந்தவர்களாக இருந்தாலும் தப்பிவிடக் கூடாது-பிரதமர் மோடி பேச்சு ..!

புதுடெல்லி: ஊழல் செய்பவர்கள் எவ்வளவு சக்தி வாய்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் தப்பிவிடக் கூடாது என ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வார நிகழ்ச்சியில் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரத்தை, மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் (சிவிசி) டெல்லியில் நேற்று கொண்டாடியது. இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசியதாவது:

ஊழலுக்கு எதிராக போராடவேண்டும் என செங்கோட்டையில் இருந்து சுதந்திர தின உரையாற்றியபோது அழைப்பு விடுத்தேன். அரசுத் துறையில் வசதிகள் குறைவாக இருப்பது, தேவையற்ற அழுத்தம் ஆகியவை ஊழலுக்கு இரண்டு முக்கிய காரணங்களாக உள்ளன. இவை மக்களின் முன்னேற்றத்துக்கு தடையாக இருக்கிறது. இந்த முறையை மாற்றி, வெளிப்படைத்தன்மையை உருவாக்க கடந்த 8 ஆண்டுகளாக மத்திய அரசு முயற்சித்து கொண்டிருக்கிறது. விநியோகத்துக்கும், தேவைக்கும் இடையிலான இடைவெளியை நிரப்பவும் மத்திய அரசு முயற்சித்து கொண்டிருக்கிறது. இந்த நிலையை அடைய தொழில்நுட்பத்தில் முன்னேற்றம், அடிப்படை சேவைகளை நிறைவை நோக்கி கொண்டு செல்லுதல் மற்றும் தற்சார்பு நிலை ஆகிய மூன்று வழிகள் பின்பற்றப்படுகின்றன.

ஊழலை எதிர்த்துப் போராட தேசிய ஜனநாயக கூட்டணி அரசு காட்டும் ஆர்வத்தைப்போல், அரசின் ஒவ்வொரு துறையும் காட்ட வேண்டும். வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கு நம்பகத்தன்மை முக்கியமானது. அரசு மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கை அவர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கிறது.

முந்தைய அரசுகள் மக்களின் நம்பிக்கையை மட்டும் இழக்கவில்லை, அவைகள் மக்களை நம்பவும் தவறிவிட்டன. நீண்டகாலமாக நிலவிய ஊழல் அடிமைத்தனம், சுரண்டல், சுதந்திரத்துக்குப் பின்பும் நிலவிய நாட்டின் வளங்கள் மீதான கட்டுப்பாடு ஆகியவை நாட்டின் 4 தலைமுறைகளை கடுமையாக பாதித்துவிட்டது. பல ஆண்டு காலமாக இருந்த இந்த நிலையை, 75வது சுதந்திர ஆண்டை கொண்டாடும் வேளையில் நாம் தற்போது மாற்ற வேண்டும். பொது விநியோக முறையை, தொழில்நுட்பத்துடன் இணைக்கப்பட்டதால், கோடிக்கணக்கான போலி பயனாளிகள் நீக்கப்பட்டு ரூ.2 லட்சம் கோடி தவறானவர்களின் கைகளுக்கு செல்வது தடுக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு பொருட்களை அதிகளவில் சார்ந்திருப்பதும் ஊழலுக்கு காரணமாக அமைந்து விடுகிறது. பாதுகாப்புத்துறையில் தற்சார்பு நிலையை பின்பற்றுவது ஊழலுக்கான வாய்ப்புகளை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. ஊழல் குறித்து மக்களும் விழிப்புடன் இருக்க வேண்டும். ஊழல்வாதிகள் எவ்வளவு சக்தி வாய்ந்தவர்களாக இருந்தாலும், அவர்களை எந்த சூழலும் காப்பாற்றக்கூடாது. இது மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் பொறுப்பு.

ஊழல்வாதிகள் சிறைக்கு சென்றாலும் அவர்கள் போற்றப்படுகின்றனர். இந்த சூழல் நாட்டுக்கு நல்லதல்ல. நாட்டில் உள்ள ஒவ்வொருவரும், நேர்மையான பாதையில் சென்று தங்கள் கடமைகளை அர்ப்பணிப்புடன் மேற்கொள்ள வேண்டும். இந்த ஆண்டு அக்டோபர் 31-ம் தேதி முதல் நவம்பர் 6-ம் தேதி வரை ஊழல் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் கொண்டாடப்படுகிறது. இதன் கருப்பொருள், ‘வளர்ந்த நாடாக மாற, ஊழல் அற்ற இந்தியாவை உருவாக்குவோம்’ என்பதுதான். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார். இந்நிகழ்ச்சியில் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் புதிய புகார் இணையதளத்தையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.