டெல்லி: உலகின் மிகப்பெரிய ரோப்வே சாலை இந்தியாவில் அமைக்கப்படும் என மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் ரோப்வே எனப்படும் தேசிய கயிறு பாதை திட்டத்தை மத்திய பாஜக அரசு கொண்டுவர உள்ளதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இந்த திட்டம் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ. 1.25 லட்சம் கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசியுள்ள மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, “பர்வதமாலா பரியோஜனா என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 200 ரோப்வே சாலைகள் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த திட்டம் அதிக செலவு கொண்டது என்பதால், அரசு மற்றும் தனியார் கூட்டு ஒப்பந்தங்கள் மூலமாக செயல்படுத்தப்பட உள்ளது. குறிப்பாக மலைப்பகுதிகளில் சுற்றுலாவின் வளர்ச்சியை அதிகரிக்கும் நோக்கத்தில் ரோப்வே சாலைகள் அமைக்கப்படும். பாதுகாப்பில் எந்த சமரசமும் இன்றி உள்நாட்டு உற்பத்தி பொருட்கள் மூலம் செலவு குறைந்த அளவில் ரோப்வேக்கள் அமைக்கப்படும். இதன் மூலம் போக்குவரத்து எளிதாக அமைவதுடன் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
இந்தியா முழுவதும் ஒட்டுமொத்தமாக 1,200 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரோப்வே சாலைகள் அமைக்கப்படும். இந்த திட்டம் வெற்றிகரமாக நிறைவேறும் பட்சத்தில் உலகின் மிகப்பெரிய ரோப்வே சாலையாக இது அமையும்” என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். மேலும், நாட்டில் 30 சதவீத பகுதிகள் மலைகள் மற்றும் காடுகளால் சூழப்பட்டுள்ளன. அங்கு சாதாரண சாலை மற்றும் ரயில் பாதைகள் உருவாக்குவது என்பது மிக கடினமான காரியம். அந்த இடங்களில் ரோப்வே மூலம் சாலை அமைக்கப்படும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி குறிப்பிட்டுள்ளார். அந்தவகையில், மலைப்பகுதிகளான அமர்நாத், காமாக்யா, கேதார்நாத் மற்றும் மஹாகாலேஷ்வர் கோவில்கள் என இந்தியா முழுவதும் தற்போது, 120 கி.மீ.க்கு மேல் ரோப்வே இணைப்புக்கான இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.