பைக் மோதி நீலகிரி மாவட்ட நீதிபதி சாவு.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள சின்னாம்பாளையத்தைச் சேர்ந்தவர் கருணாநிதி ( வயது 58) இவர் நீலகிரி மாவட்ட மகிளா கோர்ட் நீதிபதியாக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி புஷ்பராணி மாமரத்துப்பட்டி அரசு பள்ளிக் கூடத்தில் தலைமை ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர்களது மகள் காவியா ( வயது 23)திருச்சியில் உள்ள சட்ட கல்லூரியில் படித்து வருகிறார். மகன் தியானேஸ்வரன் (வயது 19) இன்ஜினியரிங் படித்து வருகிறார். இந்த நிலையில் நீலகிரியில் இருந்து 7 நாட்கள் விடுமுறைக்காக சொந்த ஊரான சின்னாம் பாளையத்திற்கு நீதிபதி கருணாநிதி வந்திருந்தார். நேற்று மதியம் 2 மணி அளவில் உடுமலை ரோடு, சின்னம்பாளையத்தில் சாலையின் ஓரம் தனது காரை நிறுத்திவிட்டு எதிரே உள்ள கடைக்கு செல்வதற்காக சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு மோட்டார் சைக்கிள் கருணாநிதி மீது பயங்கரமாக மோதி விட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் தூக்கி வீசப்பட்டதில் நீதிபதி கருணாநிதிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அக்கம்பக்கம் உள்ளவர்கள் அவரை மீட்டுசிகிச்சைக்காகபொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல்நீதிபதி கருணாநிதி இறந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் பொள்ளாச்சி நகர கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற மோட்டார் சைக்கிள் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் விபத்து ஏற்படுத்தியது பொள்ளாச்சி அருகே உள்ள கஞ்சம்பட்டியை சேர்ந்த வஞ்சிமுத்து ( வயது 28) என்பதும்,கார் மெக்கானிக்காக வேலை பார்த்து வருவதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார்அவரை கைது செய்தனர்.. விபத்தில் பலியான நீதிபதி கருணாநிதி தாராபுரம் ,பழனி உள்ளிட்ட கோர்ட்டுகளில் நீதிபதியாக பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.