AI தொழில்நுட்பம் மூலம் செய்திவாசிப்பு : புதிய முறையை அறிமுக்கப்படுத்திய குவைத்

குவைத்தில் உள்ள ஒரு செய்தி நிறுவனம் ஏ.ஐ மூலம் செய்தி வாசிக்கும் முறையை அறிமுகப்படுத்தியிருக்கிறது.

ஆர்டிஃபீசியல் இண்டலிஜன்ஸ் எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட செய்தியாளர் உருவத்தினைக் கொண்டு இதனை செய்துள்ளனர்.

இதற்கான மாதிரி வீடியோவை வெளியிட்டுள்ளது அந்த செய்தி தளம். இதில் தோன்றும் செய்தி வாசிப்பவரை ‘ஃபெதா’எனக் குறிப்பிடுகின்றனர்.

இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட ட்வீட்டில்,

“இவர் பெயர் ஃபெதா

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தினால் உருவாக்கப்பட்ட இவர் செய்திவாசிப்பாளராக பணிபுரிகிறார்.

நீங்கள் என்ன மாதிரியான செய்தியைக் கேட்க விரும்புகிறீர்கள்? உங்களது கருத்துகளை சொல்லுங்கள்” என கூறியுள்ளது.

ஏஐ தொழில்நுட்பம் பலரது வேலைவாய்ப்புகளை பறித்துவிடுமோ?

வழக்கம் போல இந்த ஏஐ தொழில்நுட்பம் செய்தியாளர்களின் இடத்தை நிரப்ப முடியுமா எனக் கேள்விகள் எழுப்பி வருகின்றனர்.

செய்தியாளர்கள் சந்தோஷமான விஷயங்களை மகிழ்ச்சியாகவும், சோகமான விஷயங்களை சோகமாகவும் வாசிப்பது போல, தவறுகளை திருத்தி சரியாக வாசிப்பது போல இதனால் செய்ய முடியுமா என்பதே இதனை எதிர்ப்பவர்கள் தரப்பு வாதமாக இருக்கிறது.

ஏற்கெனவே ஏஐ தொழில்நுட்பம் பலரது வேலைவாய்ப்புகளை பறித்துவிடுமோ என்ற அச்சத்தில் மக்கள் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.