பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கொண்ட குழு மூலமே தேர்தல் ஆணையர்களை நியமனம் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது.
தேர்தல் ஆணையர்கள் நியமன விவகாரத்தில் சீர்திருத்தம் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தின் நீதிபதி கே.எம்.ஜோசப் , நீதிபதி அஜய் ரஸ்தோகி, நீதிபதி அனிருத்தா போஸ், நீதிபதி ரிஷிகேஷ் ராய், நீதிபதி சி.டி.ரவிக்குமார் ஆகிய 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு முன் விசாரணை நடந்தது.
இந்த நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. தேர்தல் ஆணையர்கள் நியமனத்துக்கு சுதந்திரமான ஓர் அமைப்பு வேண்டும். பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் கொண்ட குழு மூலமே தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்ய வேண்டும் என தீர்ப்பு அளிக்கப்பட்டது.
அதே போல தேர்தல் ஆணையரை நீக்கம் செய்ய வேண்டும் என்றாலும் இதே வழிமுறையையே கடைபிடிக்க வேண்டும். மேலும் தற்போதைய தேர்தல் ஆணையர்கள் நியமன நடைமுறையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
நிர்வாக தலையீட்டிலிருந்து தேர்தல் ஆணையத்தை மீட்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அரசு அவர்களை நீக்காதபடி தேர்தல் ஆணையத்துக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையத்தை அமைப்பதற்கான சட்டத்தை நாடாளுமன்றம் வகுக்கட்டும் என்று விட்டுவிட்டனர். ஆனால் கடந்த 70 ஆண்டுகளாக சட்டம் இயற்றவில்லை.
அரசியல் நிர்வாகங்கள் நம்பிக்கை துரோகம் செய்துவிட்டன. எந்த தலையீடும் இல்லாமல் தேர்தல் ஆணையம் மேலும் சுதந்திரமாக செயல்பட வேண்டும். சி.பி.ஐ இயக்குநரை தேர்வு செய்வது போன்று தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை நியமிக்க வேண்டும் என்று அரசியல் சாசன அமர்வு ஒரு மனதாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.