சென்னை: பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் பாஜகவை வீழ்த்துவதற்கு தமிழ்நாடு தேர்தலில் திமுக கையில் எடுத்த வியூகத்தை பரிந்துரைத்து உள்ள முதலமைச்சர் ஸ்டாலின், கூட்டணி தொடர்பாக புதிதாக ஒரு ஆலோசனையையும் வழங்கி உள்ளார்.
அது என்ன?
பீகார் தலைநகர் பாட்னாவில் நேற்று 2024 மக்களவைத் தேர்தலை முன்னிட்டு எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மூத்த தலைவர் ராகுல் காந்தி, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார், இந்திய கம்யூனிஸ்டு தேசிய செயலாளர் டி ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் சீதாராம் எச்சூரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
திரிணாமூல் தலைவரும் மேற்கு வங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜி, ஆம் ஆத்மி தலைவரும் டெல்லி முதலமைச்சருமான அர்விந்த் கெஜ்ரிவால், ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், சிவசேனா (உத்தவ் அணி) தலைவர் உத்தவ் தாக்கரே, தேசிய மாநாட்டு கட்சி தலைவர் உமர் அப்துல்லா, ஜார்க்கண்ட் முக்தி மோர்சா தலைவர் ஹேமந்த் சோரன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் 2024 நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து கட்சிகளும் ஓரணியில் போட்டியிட முடிவு செய்யப்பது. இதில் கலந்து கொண்டு சென்னை திரும்பி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்காக இந்தியாவின் பல்வேறு கட்சிகளின் கலந்தாலோசனைக் பாட்னாவில் நடைபெற்றதாக கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “பாஜக என்று சொல்வதால் ஏதோ ஒரு தனிப்பட்ட ஒரு கட்சிக்கு எதிரான கூட்டமாக மட்டும் இதனை யாரும் நினைக்க வேண்டாம். இந்தியாவின் ஜனநாயகத்தை, மக்களாட்சியை மதச்சார்பின்மையை, பன்முகத்தன்மையை, ஒடுக்கப்பட்ட மக்களை, ஏழை எளிய மக்களைக் காப்பாற்ற வேண்டுமானால் பாஜக மீண்டும் ஒரு முறை ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் அனைத்துக் கட்சிகளும் மிகத்தெளிவாக இருக்கிறோம்.
இதில் கடைசி வரை உறுதியாக இருக்க வேண்டும் என்பதை நான் குறிப்பிட்டு சொன்னேன். 2023 ஜூன் 23 ஆம் தேதி கூடினார்கள் – 2024 மே மாதம் வெற்றி பெற்றார்கள் என்பது மட்டும்தான் வரலாற்றில் பதிவாக வேண்டும் என்று அந்தக் கூட்டத்தில் நான் அழுத்தம்திருத்தமாக பேசினேன்.
மதச்சார்பற்ற கட்சிகளின் ஒற்றுமைதான் தமிழ்நாட்டில் அடைந்தன் அனைத்து வெற்றிக்கும் காரணமாக அமைந்தது. அதேபோல் அகில இந்திய அளவிலும் ஒற்றுமைதான் முக்கியம் என்பதை நான் வலியுறுத்தி வற்புறுத்தி எடுத்துச் சொன்னேன். சில முக்கியமான ஆலோசனைகளையும் நான் அந்த கூட்டத்திலே வழங்கினேன்.
உதாரணமாக எந்த மாநிலத்தில் எந்தக் கட்சி செல்வாக்குடன் இருக்கிறதோ அந்தக் கட்சி தலைமையில் கூட்டணி அமைத்துக் கொள்ளலாம். கூட்டணியாக அமைக்க முடியவில்லை என்றால் தொகுதிப் பங்கீடுகளை மட்டும் செய்து கொள்ளலாம். அதுவும் முடியவில்லை என்றால் பொது வேட்பாளர் அறிவித்துக் கொள்ளலாம்.
தேர்தலுக்கு பிறகு கூட்டணி அமைத்துக் கொள்ளலாம் என்பது சரியான நிலைப்பாடாக இருக்க முடியாது. அரசியல் கட்சிகளுக்கு இடையே குறைந்தபட்ச செயல்திட்டம் வகுக்கப்பட வேண்டும். இதுபோன்று எழும் பிரச்னைகளைச் சரிசெய்ய ஒருங்கிணைந்த பாஜகவை வீழ்த்துவதை அனைத்துத் தலைவர்களும் ஒற்றை இலக்காகக் கொண்டு இருக்கிறார்கள். பாஜகவை வீழ்த்த அனைத்துக் கட்சிகளும் ஒன்றுபட வேண்டும்.” என்று பேசி உள்ளார்.