2019-ம் ஆண்டு நீட் வந்தது.. அப்போது ஆட்சியில் இருந்தது அதிமுக… மா.சுப்பிரமணியன் பேட்டி..!

நீட் தேர்வு தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குழம்பிய நிலையில் பேசி உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகராட்சி 178 தரமணியில் கட்டப்பட்டுள்ள புதிய மாமன்ற உறுப்பினர் அலுவலகத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை தலைமைச் செயலகத்தில் காணொலி காட்சி மூலம் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் பல்வேறு புதிய கட்டிடங்களை திறந்து வைக்கிறார். மேலும் புதிய மருத்துவமனைகளுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார். 2019-ஆம் ஆண்டு நீட் வந்தது. அப்போது காங்கிரஸ் ஆட்சியில் இருந்ததாகவும் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

2019 ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்தவர் நரேந்திர மோடி. தமிழகத்தில் ஆட்சியில் இருந்தது அதிமுக. ஆனால் எடப்பாடி பழனிச்சாமி காங்கிரஸ் ஆட்சியில் இருந்ததாக குழம்பிய நிலையில் பேசி உள்ளார். திமுகவின் உண்ணாவிரத போராட்டம் நாடகம் என்று எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். ஆனால் மதுரை அதிமுக மாநாட்டு நிகழ்ச்சிகளை பார்த்து அனைவரும் எள்ளி நகையாடுகின்றனர். மதுரையில் நடைபெற்ற மாநாட்டில் கூத்து, கொண்டாட்டம், கேளிக்கைகள் போன்ற நிகழ்ச்சிகள்தான் நடைபெற்றது.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பூதக்கண்ணாடி வைத்து குறைகளை தேடி வந்தாலும், அவருக்கு எந்த குறைகளும் கிடைக்கவில்லை என்பதால் யாராவது புகை பிடித்து விட்டால் கூட புகை பிடிக்கக் கூடாத இடத்தில் புகைப் பிடித்து விட்டார் என்று குறை கூறுகிறார்” என விமர்சித்தார்.