டெல்லி: நேஷனல் ஹெரால்டு பத்திரிகைகளின் பங்குகளை மாற்றியதில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நிகழ்ந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எம்.பியிடம் மீண்டும் இன்று அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராகுல் காந்தியை அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து இன்று 2-வது நாளாக நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்துகின்றனர்.
நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல் காந்தி ஆஜராக சம்மன் அனுப்பியது அமலாக்கப் பிரிவு. இது பழிவாங்கும் நடவடிக்கை என கூறி நாடு தழுவிய போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தது காங்கிரஸ் தலைமை.
இதனைத் தொடர்ந்து நேற்று காலை முதலே நாட்டின் பல மாநிலங்களில் காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டங்களில் குதித்தனர். டெல்லி காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்துக்கு காங். பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியுடன் ராகுல் காந்தி வருகை தந்தார். டெல்லி காங். தலைமை அலுவலகத்திலும் நேற்று காலை முதலே போராட்டங்கள் நடத்தப்படுவதும் அவர்களை போலீசார் கைது செய்வதும் தொடர்ந்து கொண்டிருந்தது.
இந்த களேபரங்களுக்கு மத்தியில் டெல்லி காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் இருந்து ராகுல் தலைமையில் அமலாக்கப் பிரிவு அலுவலகம் நோக்கி நூற்றுக்கணக்கானோர் பேரணியாக சென்றனர். ஆனால் போலீசார் ஆங்காங்கே தடுப்புகளை அமைத்து தடுக்க முயன்றனர். இதையடுத்து அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் முன்பாக ராகுல் காந்தி ஆஜரானார். அவரிடம் சுமார் 10 மணிநேரம் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் துருவி துருவி விசாரித்தனர்.
அதேநேரத்தில் டெல்லியில் போராட்டம் நடத்திய காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர். அக்கட்சியின் மூத்த தலைவர் கே.சி.வேணுகோபால் குண்டுகட்டாக அப்புறப்படுத்தப்பட்டார். டெல்லி போலீசார் தாக்கியதில் மூத்த காங். தலைவர் ப.சிதம்பரத்தின் கை எலும்பு முறிவு ஏற்பட்டது. மேலும் நூற்றுக்கணக்கான காங்கிரசார் தடுத்து வைக்கப்பட்டனர்.
இந்நிலையில் இன்று 2-வது நாளாக ராகுல் காந்தியை விசாரணைக்கு வரவழைத்துள்ளது அமலாக்கப் பிரிவு. டெல்லி அமலாக்கப் பிரிவு அலுவலகத்தில் ராகுல் காந்தியிடம் 2-வது நாளாக விசாரணை நடைபெற்று வருகிறது. இதனால் இன்றும் நாடு தழுவிய அளவிலான போராட்டத்தை நடத்துகிறது காங்கிரஸ். சென்னையில் காங். கமிட்டி தலைமையகமான சத்தியமூர்த்தி பவன் முன்பாக இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார்.
டெல்லியில் இன்று காலை முதலே காங்கிரஸ் கமிட்டி அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அப்பகுதியில் போராட்டம் நடத்திய காங். தொண்டர்கள் குண்டு கட்டாக கைது செய்யப்பட்டனர். மேலும் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் டெல்லி போலீஸ் தெரிவித்துள்ளது.