ரிமோட் வாக்குப் பதிவு முறை தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள வருமாறு அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சொந்த ஊர்களை விட்டு பிழைப்புக்காகவும், கல்விக்காகவும் வெளியூர்களில் இருப்பவர்கள் தேர்தல் நேரத்தில் வாக்களிப்பதற்காக சொந்த ஊர்களுக்கு வர வேண்டிய நிலை தற்போது வரை நிலவி வருகிறது. ஆனால், ஒரு சிலர் தன்னுடைய ஜனநாயக கடமையை ஆற்றுவதற்காக சொந்த ஊர்களில் இருந்து வருவதுண்டு. ஒரு சிலர் இவ்வளவு தூரம் பயணம் மேற்கொண்டு ஓட்டு போடனுமா? என்ற கேள்வியோடு அப்படியே இருந்து விடுகின்றனர். இதனால் தேர்தல் நேரங்களில் வாக்கு சதவீதம் என்பது மிக குறைவாகவே காணப்படுகிறது.
இந்த நிலையை மாற்றவே, தேர்தல் ஆணையம் விரைவில் ரிமோர்ட் எலக்ட்ரானிக் வோட்டிங் மெஷின் ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளது. இது குறித்து விளக்கமளித்த தேர்தல் ஆணையம், கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 67 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவானது, 30 கோடி மக்கள் வாக்களிக்கவில்லை. அதற்கு ஒரே காரணம் வாக்களிப்பதற்காக பல கிலோ மீட்டர் சொந்த ஊர் செல்ல வேண்டிய நிலையில் இருப்பதால் தான் வாக்களிக்க முடியாமல் போனது என்றும் தெரிவித்தது. எனவே, இந்த ஓட்டிங் மிஷின் அமலுக்கு வந்தால் வாக்காளர்கள் இருந்த இடத்தில் இருந்தே நமது சொந்த தொகுதியில் ஓட்டுகளை பதிவு செய்யலாம், சொந்த ஊர் செல்ல வேண்டிய நிலையை தவிர்க்கலாம் என்றும் விளக்கமளித்தது.
தொடர்ந்து, இந்த திட்டம் இந்தியாவில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கும் என்பதால், இது குறித்து செயல் விளக்கம் அளிக்கவும், ஆலோசனை செய்யவும், கருத்து கேட்கவும் 8 தேசிய கட்சிகள் மற்றும் 57 மாநில கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் தரப்பில் இருந்து வருகிற ஜனவரி 16 ஆம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் எனவும், ஜனவரி 31 ஆம் தேதிக்குள் அரசியல் கட்சிகள் உங்களுடைய கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ரிமோட் வாக்குப் பதிவு முறை தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள வருமாறு அதிமுகவிற்கு விடுக்கப்பட்ட அழைப்பிதழில் அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு கடிதம் அனுப்பியுள்ளார். இந்த கடிதம் அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
முன்னதாக, அதிமுக சார்பில் 2021- 2022 ஆம் ஆண்டிற்கான அதிமுக வரவு செலவு கணக்குகள் நவம்பர் 29ஆம் தேதியே அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் என குறிப்பிட்டு எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்தார். இந்த வரவு செலவு கணக்குகளை இந்திய ,தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டுள்ளதோடு அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி என்ற அடிப்படையில் தாக்கல் செய்த விவரங்களை தேர்தல் ஆணைய இணையதளத்திலும் பதிவேற்றியது. இந்நிலையில், தற்போது தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு அனுப்பிய கடிதம் அரசியல் வட்டாரங்களில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.