இளைஞரை கொலை செய்து தலையைத் தூக்கிச் சென்ற மர்ம கும்பலால் மக்கள் பெரும் அதிர்ச்சியும் அச்சமும் அடைந்துள்ளனர்.
திருப்பூர் செரங்காடு பகுதியில் உள்ள தனியார் எம்பிராய்டரிங் நிறுவனத்தில் இருநாள்களுக்கு முன்பாக கும்பகோணத்தைச் சேர்ந்த சதீஷ் (24) என்பவர் பணியாற்றி வந்தார். இதே நிறுவனத்தில் திருச்சியைச் சேர்ந்த ரஞ்சித் (22) என்பவரும் பணியாற்றி வந்துள்ளார். இவர்கள் இருவரும் நண்பர்களாக பழகி வந்துள்ளனர்.
இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று இவர்கள் இருவரும் செரங்காடு பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் மது அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் 5 பேர் கொண்ட கும்பல் இருவரையும் சூழ்ந்தனர். அவர்கள் கையில் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் வைத்திருந்ததால் இருவரும் தப்பியோட முயன்றனர்.
எனினும், 5 பேர் கொண்ட மர்ம கும்பல் இருவரையும் சுற்றிவளைத்து கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். மேலும், இருவரிடம் இருந்த பணம், மொபைல் ஆகியவற்றையும் பறித்துள்ளனர். இவர்களிடமிருந்து தப்பிய ரஞ்சித் அப்பகுதியில் உள்ள குடியிருப்புக்கு சென்றுள்ளார்.
அங்கு அவர் பலத்த காயமடைந்ததைத் பார்த்த பொதுமக்கள் நல்லூர் ஊரக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதன் பேரில் அங்கு வந்த போலீசார் காயமடைந்த ரஞ்சித்தை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதனிடையே, சதீஷை மர்ம கும்பல் தூக்கிச் சென்றதாக ரஞ்சித் தெரிவித்த தகவலின்பேரில் செரங்காடு பகுதிக்கு போலீசார் விரைந்தனர். அப்போது அங்கு சதீஷின் தலை இல்லாமல் உடல் மட்டுமே இருந்ததால் அதிர்ச்சியடைந்தனர். மேலும், அவரைக் கொலை செய்த மர்ம கும்பல் தலையைத் தூக்கிச் சென்றதாக போலீசார் கூறுகின்றனர்.
இதுகுறித்த தகவலின்பேரில் திருப்பூர் மாநகர காவல் ஆணையர் ஏ.ஜி.பாபு, துணை ஆணையர் ரவி உள்ளிட்ட காவல் அதிகாரிகள் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். மேலும், கொலையாளிகளைப் பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.