தகனம் செய்யப்பட்டது மயில்சாமி உடல்.. கண்ணீருடன் விடை கொடுத்தனர் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள்..!

சென்னை: நேற்று அதிகாலை உயிரிழந்த மயில்சாமியின் உடலானது வடபழனியில் இருக்கும் மின் மயானத்தில் எரியூட்டப்பட்டது.

அவரது இறுதி ஊர்வலத்தில் பலர் கலந்து கொண்டனர்.

நகைச்சுவை நடிகரும், பல குரல் கலைஞருமான மயில்சாமி தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நகைச்சுவை ஆளுமையாக வலம் வந்தவர். விவேக், வடிவேலு உள்ளிட்ட பலருடன் அவர் நடித்த நகைச்சுவை காட்சிகள் காலம் கடந்து பேசப்படுபவை. நடிகராக மட்டுமின்றி மிகச்சிறந்த மனிதராகவும் இருந்தவர் மயில்சாமி.

மயில்சாமி திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் மற்றும் சிவனின் தீவிர பக்தர் ஆவார். வருடாவருடம் திருவண்ணாமலை மகா தீபத்திற்காக திருவண்ணாமலை செல்வதை வழக்கமாக வைத்திருப்பவர். அதேபோல், சிவராத்திரிக்கும் இரவு முழுவதும் கண் விழிக்கும் அளவுக்கு பக்தராக இருந்தவர். இந்த வருடமும் சிவராத்திரிக்காக கடந்த சனிக்கிழமை இரவு முழுவதும் விழித்திருந்தார். அதனையடுத்து வீட்டுக்கு சென்ற அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் அவருக்கு உயிர் பிரிந்தது. மயில்சாமியின் மறைவு ஒட்டுமொத்த கோடம்பாக்கத்தையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

மயில்சாமி உயிரிழந்த பிறகு அவரது உடல் அஞ்சலிக்காக சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்தது. அங்கு இருந்த உடலுக்கு பலரும் அஞ்சலி செலுத்தினர். ரஜினிகாந்த் இன்று மயில்சாமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், மயில்சாமி எனது நெருங்கிய நண்பர். அடிக்கடி நேரில் சந்தித்துக்கொள்வோம்.

என்னிடம் இருவரைப்பற்றி அடிக்கடி பேசுவார். ஒருவர் எம்ஜிஆர், இன்னொருவர் சிவன். கேளம்பாக்கத்தில் இருக்கும் கோயிலுக்கு நான் பாலாபிஷேகம் செய்ய வேண்டும் என்பது அவரது கடைசி ஆசை. அதனை நான் நிச்சயம் நிறைவேற்றுவேன் என செய்தியாளர்களிடமும் மயில்சாமி குறித்து உருக்கத்துடன் பேசினார் ரஜினி.

இதனையடுத்து மயில்சாமியின் இறுதி ஊர்வலம் இன்று காலை நடைபெற்றது. சாலிகிராமத்தில் இருக்கும் அவரது வீட்டிலிருந்து அவரது உடல் வடபழனிக்கு வாகனத்தில் எடுத்து செல்லப்பட்டது. மயில்சாமியின் உடல் வைக்கப்பட்டிருந்த வாகனத்தில் நகைச்சுவை நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டோர் இருந்தனர்.

வாகனத்தோடு பல நகைச்சுவை கலைஞர்களும், ரசிகர்களும் நடந்தபடி சென்றனர். மேலுஜ்ம், இறுதி ஊர்வலத்தின்போது கண்ணதாசனின் தத்துவ பாடல்களும், எம்ஜிஆர் பாடல்களும் ஒலிக்கவிடப்பட்டன.

இந்நிலையில் சாலிகிராமத்தில் புறப்பட்ட இறுதி ஊர்வலம் வடபழனியில் முடிந்தது. அதனையடுத்து அங்கிருக்கும் மின் மயானத்தில் மயில்சாமியின் உடல் வடபழனியில் இருக்கும் மின் மயானத்தில் எரியூட்டப்பட்டது. அதன் பிறகு அவரது மகன் கதறி அழுதார். அவர் மட்டுமின்றி, மயில்சாமியின் உடல் மின் மயானத்தில் எரியூட்டப்பட்டபோது அங்கிருந்த திரையுலகினரும், ரசிகர்களும் கண்ணீர் விட்டு அழுது மயில்சாமிக்கு பிரியா விடை அளித்தனர்..

மயில்சாமியின் உடல் எரியூட்டப்பட்டதற்கு முன்னதாக தமிழில் மந்திரமும் சொல்லப்பட்டது..