முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழா: அக்30ம் தேதி பசும்பொன்னில் அன்னதானத்தை தொடங்கி வைக்கிறார் ஓ.பன்னீர்செல்வம்..!

ராமநாதபுரம்: முத்துராமலிங்கத் தேவர் பிறந்தநாள் ஜெயந்தி விழாவை ஒட்டி அக்டோபர் 30ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் அன்னதானத்தை தொடங்கி வைக்கிறார் ஓ.பன்னீர்செல்வம்.

கடந்த சில நாட்களாக அன்னதானத்தை தொடங்கி வைக்குமாறு முக்குலத்தோர் அமைப்பினர் பலர் ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்து வருகின்றனர்.

இதனால் ஓபிஎஸ் சற்று உற்சாகம் அடைந்திருப்பதுடன் அன்னதானத்திற்கும் தன்னால் இயன்ற தொகையை வாரி வழங்கி வருகிறாராம்.

ஆண்டுதோறும் அக்டோபர் 30ஆம் தேதியன்று முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை மற்றும் பிறந்தநாள் ஜெயந்தி விழா ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் நடைபெறும். தேவரின் நினைவிடம் அருகே முக்குலத்தோர் அமைப்பினர் சார்பில் அன்னதான நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம். இதனிடையே முக்குலத்தோர் புலிப்படை கட்சி தலைவரும் நடிகருமான கருணாஸ் ஆண்டுதோறும் அன்னதானம் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

தென்நாடு மக்கள் கட்சிஇந்தாண்டு முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழாவன்று தென்நாடு மக்கள் கட்சி சார்பில் பசும்பொன் கிராமத்தில் நடத்தப்படவுள்ள அன்னதானத்தை ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி வைக்கவிருக்கிறார். இன்னும் ஒரு சில அமைப்புகளும் ஓ.பி.எஸ்.க்கு அழைப்பு விடுத்திருப்பதால் அவர்கள் நடத்தும் அன்னதானத்தையும் அவர் தொடங்கி வைக்கவுள்ளார். இதனால் ஓபிஎஸ் சற்று உற்சாகம் அடைந்திருப்பதுடன் அன்னதானத்திற்கும் தன்னால் இயன்ற தொகையை வாரி வழங்கி வருகிறாராம்.

மாவட்ட நிர்வாகத்தின் புரோட்டகால் படி திமுக சார்பில் முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை செலுத்தி புறப்பட்ட பிறகு அதிமுகவுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் எடப்பாடி பழனிசாமியையோ அல்லது அவர் சார்பில் வரும் முன்னாள் அமைச்சர்களையோ முந்தி முதல் ஆளாக முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் முதல் மரியாதை செலுத்த திட்டமிட்டுள்ளார் ஓபிஎஸ்.

இதனிடையே ஓ.பன்னீர்செல்வம் குடும்பத்தின் சார்பில் அவரது இளைய மகன் ஜெயபிரதீப் பசும்பொன் கிராமத்தில், தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு அன்னதானம் வழங்குவார் எனத் தெரிவிக்கப்படுகிறது. ஆனால் நாம் இது குறித்து விசாரித்ததில் இன்னும் இது தொடர்பாக அவர் எந்த முடிவும் எடுக்கவில்லை என பதில் வந்தது.