போபால்: மத்தியப் பிரதேசத்தில் நேற்றிரவு நடைபெற்ற பயங்கர விபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விபத்தில் 40க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தேசிய நெடுஞ்சாலை 30ல் கனரக வாகனம் மீது பேருந்து மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகையையொட்டி மக்கள் நகரங்களிலிருந்து தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் மத்தியப் பிரதேச மாநிலம் ரேவில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 30ல் நேற்று நள்ளிரவு பயங்கர விபத்து நடந்துள்ளது. அதாவது, ஜபல்பூரில் இருந்து ரேவா வழியாக பிரயாக்ராஜ் நோக்கி பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியார் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்துள்ளது. தீபாவளி பண்டிகை என்பதால் பேருந்தில் பயணிகள் எண்ணிக்கை முழுமையாக இருந்துள்ளது. இந்நிலையில் மலைப்பாதையில் எதிரே வந்த ஒரு லாரி மீது பேருந்து மோதியுள்ளது. இந்த விபத்தில் சுமார் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
விபத்து நடந்ததையடுத்து அவ்வழியாக சென்றவர்கள் மீட்புப்பணியை மேற்கொண்டனர். பின்னர் காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டதையடுத்து விரைந்து வந்த காவல்துறையினர் பொதுமக்களுடன் சேர்ந்து மீட்பு பணியை மேற்கொண்டனர். முதல் கட்டமாக பலத்த காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் இருந்த தியோந்தர் சிவில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருபவர்களின் நிலையும் கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
விபத்து நடந்த பகுதியை மாவட்ட ஆட்சியர் மனோஜ் புஷ்ப், எஸ்பி நவ்நீத் பாசின், மௌகஞ்ச் ஏஎஸ்பி விவேக் குமார் லால், எஸ்டிஓபி தியோந்தர் சமர்ஜித் சிங், சோஹாகி காவல் நிலைய நிலைய பொறுப்பு இன்ஸ்பெக்டர் ஓபி திவாரி, சக்ஹாட் காவல் நிலைய பொறுப்பு சப்-இன்ஸ்பெக்டர் அபிஷேக் பட்டேல் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளனர். இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எஸ்பி ரேவா நவ்நீத் பாசின், “ரேவாவில் சுஹாகி மலை அருகே பேருந்தும் கனரக வாகனமும் மோதிக்கொண்டதில் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த தனியார் பேருந்து ஹைதராபாத்திலிருந்து உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜ் பகுதிக்கு ஜபல்பூரில் இருந்து ரேவா வழியாக பயணித்துக்கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டுள்ளது. காயமடைந்த 40 பேரில் 20 பேர் பிரயாக்ராஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் பெரும்பான்மையானவர்கள் உத்தரப் பிரதேசத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம்.” என கூறியுள்ளார். விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தீபாவளிக்கு சொந்த ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்த பேருந்து விபத்தில் சிக்கியதில் 14 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.