சென்னை: தமிழகத்தில் ,பிறை தென்படாத நிலையில் ஜூலை 29ம் தேதி மொஹரம் பண்டிகை கொண்டாடுவதற்கான தேதியை அரசு தலைமை காஜி சலாவுதீன் முகம்மது அயூப் அறிவித்துள்ளார் .
இஸ்லாமியர்களின் ரம்ஜானுக்கு அடுத்தபடியாக புனித நாளாக மொஹரம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ரம்ஜானை போல் மொஹரம் பண்டிகையும் பிறை பார்க்கும் தேதியை பொறுத்து கொண்டாடப்பட்டு வருகிறது. மொஹரம் பண்டிகை கொண்டாடப்படும் நாள் முஹர்ரம்-உல்-ஹரம் என்றும் அழைக்கப்படுகிறது.
இஸ்லாமிய நம்பிக்கைகளின்படி, கடவுளின் தூதராகக் கருதப்பட்ட முஹம்மது நபி, முஹர்ரம் மாதத்தை ‘அல்லாஹ்வின் புனித மாதம்’ என்று அழைத்தார். 354 அல்லது 355 நாட்களைக் கொண்ட ஹிஜ்ரி நாட்காட்டியின்படி முஹர்ரம் மொஹரம் ஆண்டின் முதல் மாதம் ஆகும்.
இதனால் தான் மொஹரம் பண்டிகையும் இஸ்லாமியர்களின் முக்கிய கொண்டாட்டமாக உள்ளது. இந்நிலையில் தான் மொஹரம் பண்டிகை கொண்டாடப்படும் நாள் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக அரசு தலைமை காஜி சலாவுதீன் முகம்மது அயூப் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவரது அறிவிப்பில், ”துல்ஹஜ் மாதம் 29ம் தேதி (ஜூலை 18) மாலை மொஹரம் மாத பிறை சென்னையிலும் பிற மாவட்டங்களிலும் காணப்படவில்லை. ஆகையால் ஜூலை 20-ம் தேதி மொஹரம்மாத முதல் பிறை என்று ஷரியத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டுள்ளது. இதனால் யொமே ஷஹாதத், ஜூலை 29 ஆகும்” என தெரிவித்துள்ளார்..