புதுடில்லி: வரவிருக்கும் லோக்சபா தேர்தலில், பாஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று நரேந்திர மோடியே பிரதமர் ஆவார் என கணிக்கப்பட்டு உள்ளது.
இதன் மூலம், சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் நேரு தொடர்ச்சியாக 3 முறை பிரதமர் பதவி வகித்தவர் என்ற சாதனைக்கு இணையாக மோடியும் தொடர்ந்து 3வது முறையாக பிரதமர் ஆகிறார் என்ற பெருமையை பெறுவார். இந்தியா டிவி – சிஎன்எக்ஸ் நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது: பிரதமர் மோடிக்கு சவால் விடும் வகையில் தற்போது எந்த தலைவரும் இல்லை என பெரும்பாலானோர் கூறி உள்ளனர். அதேநேரம், எதிர்க்கட்சிகள் ‘ இந்தியா’ என்ற பெயரில் ஒன்றிணைந்துள்ளதால், வரும் தேர்தலில் மோடி இன்னும் கடினமாக உழைக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 47 சதவீத ஓட்டுகளும், எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணிக்கு 32 சதவீத ஓட்டுகளும் கிடைக்கும் என கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் பா.ஜ.,வுக்கு 318 தொகுதிகளும், ‘ இந்தியா’ கூட்டணிக்கு 175 தொகுதிகளும், மற்ற கட்சிகளுக்கு 50 தொகுதிகளும் கிடைக்கும் எனவும். பா.ஜ., மட்டும் 290 தொகுதிகளில் வெற்றி பெறும் எனவும் அந்த கருத்துக்கணிப்பில் கூறப்பட்டு உள்ளது.உபி.,யில் மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 73 தொகுதிகள் கிடைக்கும். அதில் பா.ஜ., மட்டும் 70, அப்னா தளம் 2, எஸ்பிஎஸ்பி- 1 தொகுதிகள் கிடைக்கும் எனவும், சமாஜ்வாதி கூட்டணிக்கு 5ம், காங்கிரஸ் 2 தொகுதிகள் கிடைக்கும்.உத்தரகண்டில் மொத்தம் உள்ள 5 தொகுதிகளையும் பா.ஜ., கைப்பற்றும்.ஒடிசாவில் 13 தொகுதிகளில், 5 தொகுதிகளை அம்மாநிலத்தை ஆளும் பிஜூ ஜனதா தளமும், 8 தொகுதிகளை பா.ஜ.,வும் கைப்பற்றும்.மேற்கு வங்க மாநிலத்தில் ஆளும் திரிணாமுலுக்கு கூடுதலாக 7 தொகுதிகள் கிடைக்கவும், பா.ஜ., 6 தொகுதிகளை இழக்கவும் வாய்ப்பு உள்ளது. திரிணாமுல் காங்கிரசுக்கு 29 தொகுதிகளும், பா.ஜ.,வுக்கு 12 தொகுதிகளும் கிடைக்கும் சூழல் உள்ளது.மஹாராஷ்டிராவில் பா.ஜ., ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் கூட்டணிக்கு 20 தொகுதிகளும், உத்தவ் தாக்கரே அணிக்கு 11 தொகுதிகளும் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.குஜராத்தில் மொத்தம் உள்ள 26 தொகுதிகளையும் பா.ஜ.,வுக்கு கிடைக்கக்கூடும்.ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டியும், தெலுங்கானாவில் சந்திரசேகர ராவ் கட்சியும் அதிக தொகுதிகளை கைப்பற்றும்.தமிழகத்தில் தி.மு.க., கூட்டணி 30 தொகுதிகளிலும், அதிமுக 8 தொகுதிகளிலும் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. இவ்வாறு, அந்த கருத்துக்கணிப்பில் கூறப்பட்டு உள்ளது.