சென்னை: தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் தாங்க முடியாத அளவுக்கு இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக வட உள்மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் வீசும் வெப்ப அலையால், அந்த மாவட்டங்களில் வெப்பம் சுட்டெரித்து வருவதை பார்க்க முடிகிறது.இது ஒரு புறம் இருக்க வெயிலுக்கு இதமாக, கடந்த 2 தினங்களாக தமிழ்நாட்டில் சில இடங்களில் மிதமான முதல் கனமழை பெய்து வருகிறது. அந்தவகையில் காற்றின் திசை மாறுபாடு காரணமாக இன்றும், நாளையும் தமிழகத்தில் சில இடங்களில் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் மணிக்கு 30 முதல் 40 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் மிதமான மழையும், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, நெல்லை, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர் ஆகிய 14 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும். நாளை தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் காற்றுடன் மிதமான மழையும், நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, தென்காசி, விருதுநகர், நெல்லை, ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் அதிகாலை மழை சென்னையின் அடையாறு, மைலாப்பூர், வடபழனி, தாம்பரம், வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இன்று அதிகாலை மிதமான மழை பெய்துள்ளது. சில நாட்களாக கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், மழையால் வெப்பம் தணிந்து சற்று குளிர்ந்த சூழல் நிலவுகிறது. மேலும் இன்று அதிகாலை கிண்டி கோட்டம் கிண்டி, மயிலாப்பூர், வேளச்சேரி, தாம்பரம், ஆலந்தூர் மற்றும் சோழிங்கநல்லூர் தாலுகாக்களை உள்ளடக்கிய பகுதிகளில் மழை பெய்தது. அதிகாலை 3 மணி அளவில் சென்னையில் மழை தொடங்கியது. 5 – 6 மணி வரை மழை விடாமல் நீடித்தது. 6 மணி தாண்டியும் சில இடங்களில் சாரல் மழை பெய்தது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக இந்த திடீர் மழை பெய்துள்ளது.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0