அக்.9-ல் கூடுகிறது தமிழக பேரவை – அப்பாவு அறிவிப்பு..!

சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டம் அக்டோபர் 9-ம் தேதி தொடங்கப்படும் என்று பேரவைத் தலைவர் மு.அப்பாவு தெரிவித்தார்.

இதுகுறித்து செய்தியாளர் களிடம் நேற்று அவர் கூறியதாவது: அக்டோபர் 9-ம் தேதி காலை 10 மணிக்கு சட்டப்பேரவை கூட உள்ளது. அன்று 2023-24-ம் ஆண்டு கூடுதல் செலவினங்களுக்கான மானிய கோரிக்கையை நிதியமைச்சர் தாக்கல் செய்வார். பேரவையை எத்தனை நாட்கள் நடத்துவது என்பதை அலுவல் ஆய்வுக்குழு கூடி முடிவெடுக்கும் என்றார். தொடர்ந்து செய்தியாளர்கள் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள்:

அந்த சட்டம் நிறைவேற்றப்பட்டால், சட்டப்பேரவையிலும் சேர்த்துதான் நிறைவேற்றுவார்கள். அதுநடைமுறைக்கு வருமா என்பது பெரிய கேள்விக்குறியாக அனைத்து கட்சியினரும் பேசியுள்ளனர்.

தமிழகத்தில் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பெண்களுக்கு ஒரே கையெழுத்தில், தமிழக முதல்வர் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் ரூ.1000 கொடுத்துள்ளார். எனவே மகளிருக்கு ஏதாவது திட்டம் கொண்டுவர வேண்டும் என்பதற்காக இதை கொண்டு வந்துள்ளதாக பலர் என்னிடம் தெரிவித்தனர்.

சட்டத்தை அறிமுகப்படுத்துபவர்களே இதை நிறைவேற்ற முடியாது என்றுதானே கூறுகின்றனர். இன்னும் 2021 மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. 2027-க்குப் பின்னர்தான் எடுக்கப்படும் என்கின்றனர். நாடாளுமன்ற, சட்டப்பேரவை தொகுதி மறுவரையறை செய்ய வேண்டும் என்கின்றனர். என்ன செய்கிறார்கள் என்பதை வெளிப்படைத்தன்மையுடன் கூறினால்தான் அனைவருக்கும் தெரியும்.

நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர்தான் முதலில் உரையாற்றுவார். ஆனால், புதிய நாடாளுமன்ற கட்டிட திறப் புவிழாவுக்கும் குடியரசுத் தலைவரை அழைக்கவில்லை. நேற்றைய கூட்டுக் கூட்டத்துக்கும் அழைக்கவில்லை. ஏற்கெனவே உள்ள நாடாளுமன்ற பழைய கட்டிடத்தில் நிறைவு விழா நடத்தப்பட்டது. அதற்கும் குடியரசுத் தலைவரை அழைக்கவில்லை. எனவே அவர்களின் ‘அஜெண்டா’ என்ன என்பது யாருக்கும் தெரியவில்லை. அவர் தாழ்த்தப்பட்ட பெண் என்பதால் புறக்கணிக்கிறார்கள் என்று பத்திரிகைகளில் எழுதியதை நாங்கள் அறிந்து கொள்கிறோம்.

அவற்றை அரசு கேட்டு வாங்கிக் கொள்ளும். பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதே ஆளுநரின் பணி. ஆளுநராக இருந்தாலும் சட்டப்படி நடந்து கொள்ள வேண்டும்.

புதிய கட்டிடம் கட்ட முதல்வர் மசோதா கொண்டு வந்தால் அதை நிறைவேற்றித் தருவோம்.இவ்வாறு பேரவைத் தலைவர் தெரிவித்தார்.