மக்களைத் தேடி மருத்துவ திட்டம் : கோவையில் 2.03 லட்சம் பேர் இணைப்பு..!

கோவை: தமிழகத்தில் சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம் போன்ற தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு வீடுகளுக்கே சென்று சிகிச்சை அளிக்கும் விதமாக பொது சுகாதாரத் துறை சார்பில் கடந்தாண்டு ஆகஸ்டு மாதம் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் மாவட்ட வாரியாக சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம் நோயால் பாதிக்கப்பட்டவர்களை மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் இணைந்து மருந்துகள் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி கோவை மாவட்டத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் 2.03 லட்சம் பேர் இணைக்கப்பட்டு மருத்துவ சேவை அளிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து சுகாதாரத் துறை துணை இயக்குனர் அருணா கூறியதாவது:- மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் வீடுகளுக்கே சென்று பொது மக்களுக்கு மருத்துவ சேவை அளிக்கப்படுகிறது. இதில் சர்க்கரை, உயர் ரத்த அழுத்த பாதிப்புள்ளவர்களுக்கு வீடுகளுக்கே சென்று மருந்து, மாத்திரைகள் வழங்கப்படுகிறது. தவிர உயர் ரத்த அழுத்த பரிசோதனை, சர்க்கரை பரிசோதனை, இயன்முறை சிகிச்சைகள் ஆகிய சேவைகளும் அளிக்கப்படுகிறது.
இத்திட்டத்தில் சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு சென்று 2 மாதங்களுக்கு ஒருமுறை மருந்துகள் வழங்கப்படுகிறது. அடுத்த மாதம் அரசு ஆஸ்பத்திரிகளில் டாக்டர்களின் ஆலோசனைகளை பெற்று ஒரு மாதத்திற்கான மருந்துகளை பெற்றுகொள்ள வேண்டும். மீண்டும் அடுத்த 2 மாதங்களுக்கான மருந்துகள் வீடுகளுக்கு சென்று வழங்கப்படுகிறது. இதேபோன்று தொடர்ந்து இந்த சேவையை பெற முடியும்.
வீடு, வீடாக கள ஆய்வு செய்தும், சிறப்பு முகாம் நடத்தியும், வாக்காளர் பட்டியலின் விவரங்களை வைத்து கொண்டு ஆய்வு செய்தும் 2.03 லட்சம் பயனாளிகள் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளனர். அப்பிடியிருந்தும் இத்திட்டத்தில் இணைக்காமல் விடுபட்டிருந்தால் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் கிராம செவிலியர் உதவியுடன் திட்டத்தில் இணைத்துகொள்ளலாம் இவ்வாறு அவர் கூறினார்.