கேரள படகு விபத்தில் பல பேர் பலியாகலாம் – ஒரு மாதத்திற்கு முன்பே கணித்து கூறிய நிபுணர்..?

திருவனந்தபுரம்: கேரளாவில் படகு விபத்தில் பத்து அல்லது அதற்கு மேற்பட்டோர் பலியாகலாம் என்று பேரிடர் மீட்பு நிபுணர் டாக்டர் முரளி தும்மருகுடி ஒரு மாதத்திற்கு முன்பே கணித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கேரளாவில் நடந்த படகு விபத்து காரணமாக இதுவரை பலியானோர் எண்ணிக்கை 22ஆக உயர்ந்து உள்ளது.

மலப்புரத்தில் நடந்த படகு விபத்தில் பலி எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இரவு முழுக்க விடாமல் நடந்த மீட்பு பணிகள் தற்போதும் தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கிறது.

மலாபுரத்தில் உள்ள தன்னூர் என்ற பகுதிக்கு அருகில் இருக்கும் தூவல் தீரம் பகுதியில் இந்த சம்பவம் நடந்து உள்ளது. அங்கே சுற்றுலா பயணிகள் சென்ற படகு இல்லம் மூழ்கி விபத்து ஏற்பட்டு இருக்கிறது.

கேரளாவில் படகு விபத்தில் பத்து அல்லது அதற்கு மேற்பட்டோர் பலியாகலாம் என்று பேரிடர் மீட்பு நிபுணர் டாக்டர் முரளி தும்மருகுடி ஒரு மாதத்திற்கு முன்பே கணித்திருந்தார். முரளி தும்மருகுடி இது தொடர்பாக பெரிய பேஸ்புக் போஸ்ட் ஒன்றையும் செய்து இருந்தார்.

ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் பேரழிவு மேலாண்மை திட்ட இந்திய கிளையில் பணிபுரியும் தும்மருக்குடி, கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி பேஸ்புக்கில் ஒரு நீண்ட போஸ்ட் செய்து இருந்தார். அதில் கேரளாவில் படகு விபத்து நடக்கலாம் என்று குறிப்பிட்டு இருந்தார்.

அதில், கேரளாவில் விரைவில் பெரிய படகு விபத்து, வெள்ளத்தில் மக்கள் மூழ்கி சாகும் விபத்து ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. இது ஒன்றும் ஜோசியம் இல்லை. சூழ்நிலைகளை வைத்து செய்யப்படும் கணிப்பு.

கேரளாவில் படகு விபத்தில் பத்து பேருக்கு மேல் உயிரிழக்க வாய்ப்புகள் உள்ளன. அப்படி ஒரு சம்பவம் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம்.

 நான் எதையாவது கணித்தால் ​​அது ஜோதிடக் கணிப்பு அல்லது ஊகம் அல்ல.. அப்படி நினைக்க வேண்டாம்.

ஒரு இடத்தின் அபாயத்தை மதிப்பாய்வு செய்ய வேண்டும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆய்வு செய்ய வேண்டும் மற்றும் அடுத்தடுத்து நடக்கும் சிறு விபத்துகளின் போக்கை கண்காணிக்க வேண்டும்.

தொடர்ந்து குடித்துவிட்டு பைக் ஓட்டும் சிறுவன் சாலை விபத்தில் சிக்குவார் என்று கணிக்க ஜோதிடம் தேவையில்லை. அதேபோல்தான் இதுவும்.

 கேரளாவில் நோயாளிகள் அல்லது உறவினர்களால் கடந்த ஒரு மாதத்தில் மற்றும் சுமார் ஐந்து சுகாதாரப் பணியாளர்கள் தாக்கப்பட்டு உள்ளனர். நல்லவேளையாக இந்த தாக்குதல்களில் இதுவரை யாரும் சாகவில்லை. ஆனால் இதே போக்கு நீடித்தால் ஒருவர் கண்டிப்பாக சாவார்.

அதேபோல்தான் கேரளாவில் நடக்கும் படகு போக்குவரத்துக்கள் காரணமாக விரைவில் விபத்துகள் நடக்க வாய்ப்புகள் உள்ளன.

கண்டிப்பாக ஹவுஸ் போட் விரைவில் விபத்தில் சிக்கும்.

ஹவுஸ் போட் இப்போது கேரளாவில் மிகவும் பிரபலமான சுற்றுலா பயண முறையாக உள்ளது

ஹவுஸ் போட் இப்போது கேரளாவில் மிகவும் பிரபலமான சுற்றுலா பயண முறையாக உள்ளது .இப்போது கோழிக்கோடு முதல் கொல்லம் வரையிலான ஆறுகள் மற்றும் ஏரிகளில் படகுகள் பயணத்திற்காக அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன.

இது போல கேரளாவில் எத்தனை படகுகள் உள்ளன?

 டாக்ஸியை அழைக்க கூட உபெர் மற்றும் ஓலா இருக்கும் நாட்டில், கேரளாவில் ஹவுஸ்போட் அமைப்புகளை புக் செய்ய இதுவரை சரியான முன்பதிவு முறை ஏன் இல்லை? இதை ஏன் யாரும் சரியாக கண்காணிப்பதும் இல்லை.

ஆனால் நான் சொல்ல வருவது அது அல்ல..

நான் பலமுறை ஹவுஸ் படகில் சென்று இருக்கிறேன். எல்லாமே அழகாக இருந்துள்ளது.

ஆனால் ஒருமுறை கூட நாங்கள் படகு ஹவுஸ்போட்டில் சென்றபோது பாதுகாப்பு உபகரணங்கள் கொடுக்கப்படவில்லை. அதேபோல் பாதுகாப்பு ஆலோசனைகள் வழங்கப்படவில்லை.

இந்த படகு ஓட்டுநர்களுக்கு யாராவது பாதுகாப்பு பயிற்சி அளித்துள்ளார்களா?

விமானம் அல்லது உல்லாசப் பயணக் கப்பலில் ஏறும்போது நீங்கள் பெறும் பாதுகாப்பு அறிவிப்புகளை போன்ற அறிவிப்பு ஏன் இந்த படகு பயணங்களில் கொடுக்கப்படுவது இல்லை?

ஆலப்புழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்களுடன் மிதக்கும் பார்ட்டி படகுகள் உலா வந்து கொண்டு இருக்கின்றன. இங்கெல்லாம் விபத்து ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.

இங்கே இருக்கும் பொருட்கள் பல தீப்பிடிக்க கூடியவை. இங்கேயே இவர்கள் சமையலும் செய்கிறார்கள்.

இந்த படகு பயணங்கள் முறையாக பராமரிக்கப்படுவது இல்லை, பயணிகளுக்கு பாதுகாப்பும் வழங்கப்படுவது இல்லை. இதெல்லாம் விபத்து நடப்பதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுக்கும்.

இங்கே படகு ஓட்டுனர்களுக்கு போதிய பயிற்சி கூட இல்லை. சிலர் குடித்திவிட்டு கூட படகு ஓட்டுகிறார்கள். இதே கார் டிரைவர் செய்தால் அது பெரிய குற்றமாக இருக்கும். ஆனால் இங்கே படகு பயணத்தில் அதை கண்டுகொள்வது இல்லை, என்று மிகப்பெரிய போஸ்ட் ஒன்றை போட்டு, கேரளாவில் படகு விபத்தில் பத்து அல்லது அதற்கு மேற்பட்டோர் பலியாகலாம் என்று பேரிடர் மீட்பு நிபுணர் டாக்டர் முரளி தும்மருகுடி எச்சரிக்கை விடுத்து இருந்தார்.

அவர் எச்சரித்தது போலவே இப்போது அங்கே விபத்து ஏற்பட்டு உள்ளது.