மணிப்பூர் முதல்வர் பைரேன்சிங் ராஜினாமா… பிரதமர் மோடி, அமித்ஷா, நட்டா தீவிர ஆலோசனை.!!

டெல்லி: மணிப்பூர் விவகாரத்தில் முதல்வர் பைரேன்சிங் ராஜினாமா, பிரதமர் மோடி விளக்கம் உள்ளிட்டவை தொடர்பாக மத்தியில் ஆளும் பாஜக இன்று முக்கிய முடிவை பாஜக ஆட்சி மன்ற குழு கூட்டத்துக்குப் பின் அறிவிக்கக் கூடும் என்கின்றன டெல்லி தகவல்கள்.

மணிப்பூர் விவகாரம் மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு மிகப் பெரும் நெருக்கடியாக உருவெடுத்திருக்கிறது. மணிப்பூர் வன்முறைகள் தொடர்பாக பிரதமர் மோடி விளக்கம் தரக் கோரி நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் முடக்கி உள்ளனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் நாடாளுமன்றத்தில் மணிப்பூர் குறித்து விவாதிக்க தயார் என கூறி இருக்கின்றனர்.

இந்நிலையில் டெல்லியில் இன்று பாஜக ஆட்சி மன்ற குழுக் கூட்டம் நடைபெற உள்ளது. முன்னதாக பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தலைவர் ஜேபி நட்டா ஆகியோர் நேற்று இரவு தீவிர ஆலோசனை நடத்தினர். அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மாவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார். இத்தகைய அடுத்தடுத்த சந்திப்புகள், இன்றைய பாஜக ஆட்சி மன்ற குழு கூட்டம் ஆகியவை மணிப்பூர் விவகாரத்தில் முக்கிய முடிவு ஒன்று எடுக்கப்படலாம் என்பதை சுட்டிக்காட்டுவதாகவும் கூறப்படுகிறது.

மணிப்பூரில் குக்கி – மைத்தேயி இனக்குழு இடையேதான் தொடர்ந்து மோதல் நிகழ்ந்து வருகிறது. இதன்விளைவாக குக்கி இனமக்கள், தனி நிர்வாக கவுன்சிலை கோரி வருகின்றனர். இதனை மிசோரம் மாநில அரசும் ஆதரித்து வருகிறது. மிசோரம் மாநிலத்தில் ஆளும் எம்.என்.எப்., பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருக்கிறது. மிசோரம் மாநில சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இதனை அடிப்படையாகக் கொண்டு குக்கி தன்னாட்சி கவுன்சில் தொடர்பாகவும் மத்தியில் ஆளும் பாஜக அரசு முக்கிய முடிவுகள் எடுக்கக் கூடும் எனவும் டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன..