மங்களூரு குண்டு வெடிப்பு வழக்கு : என்ஐஏ-விற்கு மாற்ற கர்நாடக அரசு முடிவு..!

ங்களூரு ஆட்டோ வெடிகுண்டு தாக்குதல் விசாரணையை தேசிய புலனாய்வு விசாரணைக்கு மாற்றி கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் மங்களூருவில் நவம்பர் 19 ஆம் தேதி சாலையில் சென்றுகொண்டிருந்த ஆட்டோ ஒன்றில் திடீரென குக்கர் குண்டு வெடித்தது. ஆட்டோவில் பயணித்த ஷாரிக் என்ற நபரைப் பிடித்த போலீஸார் இச்சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை கார் வெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து நிகழ்ந்த இந்த மங்களூரு சம்பவம் இந்திய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மங்களூருவில் ஆட்டோவில் குண்டுவெடித்த சம்பவத்துக்கு ஐ.ஆர்.சி எனப்படும் இஸ்லாமிக் ரெசிஸ்டென்ஸ் கவுன்சில் எனும் பயங்கரவாத அமைப்பு தற்போது பொறுப்பேற்றுள்ளது. கர்நாடகாவில் உள்ள புகழ்பெற்ற கத்ரி மஞ்சுநாத் கோயிலைத் தகர்க்க திட்டம் தீட்டப்பட்டதாகவும் அவ்வமைப்பு தற்போது தெரிவித்துள்ளது. இத்தகவலின் உண்மை நிலை பற்றியும் சம்பந்தப்பட்ட அமைப்பு பற்றியும் கர்நாடக மாநில போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, ஷாரிக், வாட்ஸ்அப் டிபியில் ஈஷா மையத்தில் உள்ள ஆதியோகி சிலையின் படத்தை வைத்திருந்தது 2 நாட்களுக்கு முன்பு தெரிய வந்தது. இதுதொடர்பான செய்திகள் வெளியான நிலையில், தீபாவளி தினத்தன்று கோவை ஈஷா யோகா மையத்தில் மங்களூரு தாக்குதல் குற்றவாளியை பார்த்ததாக கோவையை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஆனந்தன் தெரிவித்துள்ளார். அவர் ஆதியோகி சிலையை புகைப்படம் எடுத்ததாகவும், அவருடன் மேலும் இருவர் இருந்ததாகவும் ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

கடந்த 24ம் தேதி ஷாரிக்கின் செல்போன் சிக்னல் கர்நாடகாவில் இருந்ததாக கூறப்படும் நிலையில், அன்றைய தினம் அவரை ஈஷா யோக மையத்தில் பார்த்ததாக ஆட்டோ ஓட்டுநர் கூறியுள்ளார். எனவே 24ம் தேதி பதிவான சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரிக்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.