கோவை மேயர் பங்களாவுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது..!

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் இரவு 9 – 15 மணிக்கு ஒரு அழைப்பு வந்தது அதில் பேசிய நபர் கோவை , ஆர். எஸ். புரத்தில் உள்ள மாநகராட்சி மேயர் பங்களாவுக்கு வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. அது இரவு 10 மணிக்கு வெடித்து விடும் என்று கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்து விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே மேயர் பங்களாவுக்கு போலீசார் மற்றும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் விரைந்து சென்றனர். பின்னர் மோப்ப நாயும் சம்பவ இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு “மெட்டல் டிடெக்டர் ” கருவியுடன் தீவிர சோதனை நடத்தினார்கள். வெடிகுண்டு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. அது வெறும் புரளி என்பது தெரிய வந்தது. இதனால் போலீசார் நிம்மதி அடைந்தனர். தொடர்ந்து போலீசார் வெடிகுண்டு மிரட்டல் கொடுத்த நபர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தினர் .அதில் கோவை கவுண்டம்பாளையம்,பிரபு நகரை சேர்ந்த ஆனந்த் (வயது 40) என்பது தெரிய வந்தது .உடனே கவுண்டம்பாளையம் போலீசார் இன்ஸ்பெக்டர் தங்கமணி தலைமையில் விரைந்து சென்று ஆனந்தை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர் கோவை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பிளம்பராக வேலை செய்து வருவது தெரிய வந்தது. தொடர்ந்துநடத்திய விசாரணையில் ஆனந்த் குடும்ப பிரச்சினை காரணமாக தனது மனைவி கடந்த சில நாட்களுக்கு முன்பு தன்னை விட்டு பிரிந்து சென்று விட்டாராம். இது தொடர்பாக போலீசில் புகார் செய்தும் எந்தெந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் பலமுறை போலீசாரிடம் சென்று கேட்டபோது எந்த பதிலும் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. தனது புகார் குறித்து போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், அதிருப்தியில் இருந்த ஆனந்த் போலீசார் அலைக்கழிக்க வேண்டும் என்பதற்காக மேயர் பங்களாவுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக தெரிவித்தார். இதை யடுத்து போலீசார் ஆனந்தை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.