மதுரையில் ஏப்ரல் 23ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ஒவ்வொரு நாளும் மீனாட்சி அம்மன், பிரியாவிடையுடன் சுந்தரேஸ்வரர் விதவிதமான வாகனங்களில் எழுந்தருளி மதுரை மாசி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் நேற்று காலை கோலாகலமாக நடத்தப்பட்டது. லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு இருந்து தரிசனம் செய்தனர்.
சித்திரைத்திருவிழாவின் 11வது நாளான இன்று மே 3ம் தேதி புதன்கிழமை மாசி வீதிகளில் தேரோட்டம் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. ஹர ஹர சங்கரா சிவாய சங்கரா என பக்தி முழக்கங்களை எழுப்பியபடி பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர். அலங்கரிக்கப்பட்ட பிரம்மாண்டமான பெரிய தேரில் சுந்தரேஸ்வரர் பிரியாவிடை சமேதராக காட்சி அளித்து வருகிறார். சிறிய தேரில் சிறப்பு அலங்காரத்தில் மீனாட்சி அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். திருக்கல்யாணத்தை காணமுடியாத பக்தர்களுக்கு சுவாமியும், அம்மனும் மணக்கோலத்தில் எழுந்தருளியுள்ளனர். சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு அதிகாலை முதலே பக்தர்கள் மதுரையில் குவிந்த வண்ணம் உள்ளனர். லட்சக்கணக்கான பக்தர்களுக்கு நடுவில் தேர் ஆடி அசைந்து வரும் அழகை காண உலகம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் குவிந்துள்ளனர்.
மதுரையில் 22 நாட்கள் நடைபெறும் இந்த சித்திரை திருவிழா உலகப் பிரசித்தி பெற்றது. சித்திரை முதல் ஆவணி மாதம் வரை 4 மாதங்கள் மீனாட்சியும், ஆவணி முதல் சித்திரை மாதம் வரை 8 மாதங்கள் சுந்தரேஸ்வரரும் மதுரையை ஆட்சி செய்வதாக நம்பிக்கை இன்றும் மதுரை சுற்றுவட்டாரங்களில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதன்படி மதுரையின் அரசியாக உள்ள மீனாட்சிக்கு முடிசூட்டும் விழா நடைபெற்று, திருக்கல்யாணம் தேரோட்டம் என மிக விமரிசையாக தொடர்ந்து திருவிழா நடத்தப்படுவது வழக்கம். இந்நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா தேரோட்டம் தொடங்கியுள்ளது. மாசி வீதிகளில் சிவனடியார்கள் மேளதாளம் முழங்கியும், பஞ்ச வாத்தியங்களை வாசித்தும் பக்தர்களை பரவச வெள்ளத்தில் மூழ்கியுள்ளனர்.