மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 2026 ல் பயன்பாட்டுக்கு வரும் – மத்திய அரசு உறுதி..!

மதுரை: தோப்பூரில் அமையும் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிக்கு மத்திய அரசு டெண்டர் கோரியுள்ளது. எய்ம்ஸ் கட்டுமானப்பணிக்காக ஜப்பான் நிறுவனத்திடம் இருந்து கடன் தொகை பெறப்பட்டு விட்டதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

கடந்த 2015 ஆண்டு பட்ஜெட்டில் அப்போதைய நிதியமைச்சர் அருண்ஜெட்லியால் தமிழகம் உட்பட ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், இமாச்சல பிரதேசம், அஸ்ஸாம் என ஐந்து மாநிலங்களுக்கு எய்ம்ஸ் மருத்துவமனை அறிவிக்கப்பட்டது. அதன்படி 2018ஆம் ஆண்டு மதுரையில் ரூ.1,264 கோடியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

2016ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட பஞ்சாப் மற்றும் இமாச்சல் எய்ம்ஸ் மருத்துவமனைகள் மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டன. மேலும் ஜம்மு, காஷ்மீர், அசாமில் எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பீகார் அரசு இதுவரை நிலம் ஒதுக்கீடு செய்யாததால் அங்கு எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படவில்லை.

கடந்த 2019ஆம் ஆண்டு மதுரை எய்ம்ஸ்க்கு நிலம் ஒதுக்கப்பட்ட நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். இந்நிலையில் நிலம் வழங்கி 4 ஆண்டுகளாகியும் மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் இதுவரை தொடங்கப்படவில்லை. தற்போது நான்கு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தில் விசாலமான சாலை மற்றும் சுற்றுச்சுவரை தவிர வேறு கட்டுமானப் பணிகள் எதுவும் இன்னும் தொடங்கவில்லை. இதனால், எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தை எதிர்கட்சியினர் தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தினர்.

மாநில அரசால் நிலம் வழங்கப்பட்டும், கட்டுமான பணிகள் தொடங்காதது மதுரை எய்ம்ஸ் மட்டுமே. இந்த நிலையில்தான் தமிழ்நாட்டில் எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் 2026இல் தான் நிறைவடையும் என நாடாளுமன்றத்தில் மத்திய அரசு பதிலளித்தது. கட்டிடப்பணிகளே தொடங்காத நிலையில் 2026ஆம் ஆண்டு பணிகள் எப்படி நிறைவடையும் என்ற கேள்வி எழுந்தது.

இந்த நிலையில் தோப்பூரில் அமையும் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிக்கு மத்திய அரசு டெண்டர் கோரியுள்ளது. எய்ம்ஸ் கட்டுமானப்பணிக்காக ஜப்பான் நிறுவனத்திடம் இருந்து கடன் தொகை பெறப்பட்டு விட்டதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிக்கான டெண்டரில் பங்கேற்கும் நிறுவனங்கள் செப்டம்பர் 18ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை 33 மாதங்களில் முடிக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.