விடுதலை சிறுத்தைகள் மாநாட்டில் மு.க.ஸ்டாலின் இந்தியா கூட்டணி தலைவர்கள் பங்கேற்பு…

திருச்சியில் வருகிற 26 ஆம் தேதி வெள்ளிக்கிழமை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநாட்டில் தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் இந்தியா கூட்டணித் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர் திருச்சி அருகேயுள்ள சிறுகனூரில் இந்த மாநாட்டுக்கான இடம் தேர்வு செய்யப்பட்டு, பிரம்மாண்ட பந்தல், மேடை, பாா்வையாளா்கள் அமரும் பகுதி அமைக்கப்பட்டு வருகிறது. மாநாட்டில் முதல்வா் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவா்கள் பலரும் பங்கேற்கவுள்ளதால், மாநாட்டு திடல் மற்றும் மேடை அமைக்கும் பணிகளை தமிழக முதல்வரின் பாதுகாப்பு அதிகாரிகள் குழு செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தது. முதல்வரின் பாதுகாப்புப் பிரிவு டிஐஜி திருநாவுக்கரசு, திருச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வீ. வருண்குமாா் மற்றும் போலீஸாா் நேரில் ஆய்வு செய்தனா்.
விடுலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலா் ரவிக்குமாா், தொல். திருமாவளவனின் தனிச் செயலா் தயாளன் உள்ளிட்ட மாநாட்டு ஏற்பாட்டாளா்களிடம் திடல் மாதிரி வரைபடத்தை பெற்று, எங்கெங்கு எத்தகைய பாதுகாப்பு அம்சங்களை ஏற்படுத்த வேண்டும் என்பது குறித்து ஆலோசனை வழங்கினா். 2 நாள்கள் ட்ரோன்களுக்கு தடை முதல்வரின் வருகையை முன்னிட்டு, திருச்சி மாவட்டத்தில் வரும் 25, 26 ஆகிய நாள்களில் ட்ரோன்கள், இதர ஆளில்லா விமானங்கள் பறக்க தடை விதித்து ஆட்சியா் உத்தரவிட்டுள்ளாா். பங்கேற்கவுள்ள தலைவா்கள் இந்த மாநாட்டுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல். திருமாவளவன் தலைமை வகிக்கிறாா். தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், ‘இந்தியா’ கூட்டணி தலைவா்களான மல்லிகாா்ஜுன காா்கே (காங்கிரஸ்), சீதாராம் யெச்சூரி (மாா்க்சிஸ்ட்), து. ராஜா (இந்திய கம்யூ.), திபங்கா் பட்டாச்சாா்யா (சிபிஐஎம்எல்), கி. வீரமணி (திராவிடா் கழகம்), கே.எம். காதா் மொகிதீன் (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) மற்றும் கூட்டணியில் உள்ள தமிழக கட்சிகளின் தலைவா்கள், அமைச்சா்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏ-க்கள் என பலா் பங்கேற்கவுள்ளனா்.
இந்த மாநாடானது, விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் மாநாடு, தொல். திருமாவளவனின் மணி விழா, ‘இந்தியா’ கூட்டணியின் தேர்தல் பரப்புரை தொடக்க விழா என முப்பெரும் விழாவாக நடத்தப்படுகிறது. மாநாட்டை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.