ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.2 கோடி இழப்பு: ரூ.7 கோடி இன்சூரன்ஸ் பெற காருடன் எரிந்து விட்டதாக நாடகமாடிய அரசு தலைமை செயலக ஊழியர் கைது.!

திருமலை: தெலங்கானாவில் ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.2 கோடி இழந்ததால் ரூ.7 கோடி இன்சூரன்ஸ் பெற காருடன் எரிந்து விட்டதாக நாடகமாடிய தலைமை செயலக ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

தெலங்கானா மாநிலம், மேடக் மாவட்டத்தில் உள்ள தேக்மால் அடுத்த வெங்கடாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் தர்மநாயக். இவர் மாநில செயலகத்தில் நீர்ப்பாசனத்துறையில் மூத்த உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவரது கார் கடந்த மாதம் 9ம்தேதி வெங்கடாபுரம் குளக்கரை அருகே சாலையோரத்தில் எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் தேக்மால் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில், அங்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும், விபத்து நடந்த இடத்தில் பெட்ரோல் கேன் சிக்கியது. உடல் முழுவதும் தீயில் கருகியதால் ஆதாரங்கள் அடிப்படையில் இறந்தது தர்மநாயக் என்பது தெரியவந்தது. தொடர்ந்து, பிரேத பரிசோதனைக்கு பிறகு சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில், தர்மநாயக் மனைவி நீலாஇன்சூரன்ஸ் பணத்திற்காக விண்ணப்பித்துள்ளார். கணவர் இறந்த 10 நாட்களுக்குள் இன்சூரன்ஸ் பணத்திற்காக இறப்பு சான்றிதழ் பெற்று விண்ணப்பித்துள்ளது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. எப்போது தர்மநாயக் இன்சூரன்ஸ் கட்டினார் போன்ற விவரங்களை போலீசார் சேகரிக்க தொடங்கினர். மேலும், அவரது மனைவிக்கு வந்த போன் கால் டேட்டாவை ஆய்வு செய்து விசாரித்தனர். அதில், தர்மநாயக் ஆன்லைன் சூதாட்டத்தின் மூலம் ரூ.2 கோடி வரை இழந்துள்ளார்.

சூதாட்டத்தில் இழந்த பணத்தை மீட்க ரூ.7 கோடிக்கு இன்சூரன்ஸ் கட்டியுள்ளார். இன்சூரன்ஸ் பணத்தை பெற குடும்பத்தினருடன் சேர்ந்து விபத்தில் இறந்ததுபோல் நாடகம் ஆடியது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் பூனேவில் இருந்த தர்மநாயக்கை நேற்று முன்தினம் கைது செய்தனர். ஆனால், காரில் இருந்த சடலம் யாருடையது என்று தெரியாத நிலையில் தர்மநாயக் அழைத்து வந்த டிரைவரை கொலை செய்து எரித்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.