பீகார் மாநிலம் பாட்னா-வில் பா.ஜ.க-வின் ஏழு தேசிய முன்னணி அமைப்புகளின் கூட்டுத் தேசிய செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி. நட்டா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வுக்கு முன்னதாக பா.ஜ.க தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, “2024 நாடாளுமன்றத் தேர்தல், 2025 சட்டமன்றத் தேர்தல்களில், பீகாரில் உள்ள கூட்டணிக் கட்சிகள் உட்பட பா.ஜ.க-வின் தற்போதைய தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொடரும். ஜேடி(யு) தலைவர் நிதிஷ் இனி லாலுவுடன் செல்லமாட்டார். நிதிஷ் குமார் பற்றியும், பீகார் அரசியலையும் நான் அறிவேன்” எனத் தெரிவித்தார்.
பீகாரில் ஆளும் கூட்டணிக் கட்சிகளான ஜேடி(யு) மற்றும் பா.ஜ.க இடையேயான கருத்து வேறுபாடுகள் காரணமாக, பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் அடுத்த அரசியல் நகர்வு குறித்த யூகங்களுக்கு, அருண் சிங்-கின் இந்த பதில் முற்றிப்புள்ளி வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், பா.ஜ.க-வின் ஏழு தேசிய முன்னணி அமைப்புகளின் கூட்டுத் தேசிய செயற்குழு கூட்டத்தில் அமித் ஷா, “2024 நாடாளுமன்றத் தேர்தலைப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பா.ஜ.க சந்தித்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும். 2014, 2019 தேர்தல்களில் பெற்றதை விட, அடுத்த லோக்சபா தேர்தலில் பா.ஜ.க அதிக இடங்களைப் பெற்று மாபெரும் வெற்றிப் பெரும்” என தெரிவித்துள்ளார்.