திருச்சியில் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய நில அளவையர் கைது. லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி.

திருச்சி சுப்பிரமணியபுரம் இந்திரா காந்தி நெருவை சேர்ந்தவர் பொன்னையா இவரது மகள் முனியப்பன்(50) இவர் சொந்தமாக மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் திருச்சி கொட்டப்பட்டு கிராமத்தில் 1200 சதுரஅடி உள்ள ஒரு மனையினை கடத்த மாதம் வாங்கியுள்ளார். அந்த மனையினை உட்பிரிவு செய்து பட்டா பெயர் மாற்றம் செய்வதற்காக திருச்சி கிழக்கு வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கடந்த 11-7-2024 அன்று விண்ணப்பித்துள்ளார். முனியப்பன் விண்ணப்பித்து ஒரு மாதம் ஆகியும் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து எந்த தகவலும் கிடைக்கப்பெறாததால் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று முனியப்பன் விசாரித்தார்.
அப்போது தனது மனையை உட்பிரிவு செய்து கொடுக்க கொட்டப்பட்டு பகுதிக்கான சர்வேயர் முருகேசன் (34) என்பவரை பார்க்க வேண்டும் என்று தெரிந்து கொண்டு முருகேசனிடம் பேசி உள்ளார். அதற்கு சர்வேயவர் முருகேசன், முனியப்பனின் மனையினை வந்து ஆய்வு செய்துவிட்டு உட்பிரிவு செய்து தர 15,000 லஞ்சமாக கேட்டுள்ளார்.
ஆனால் முனியப்பன் லஞ்சப் பணத்தை குறைத்து கொள்ள வேண்டுமாறு முருகேசனிடம் கெஞ்சி கேட்டதன் பேரில், முருகேசன் 5000 ரூபாய் குறைத்துக் கொண்டு 10 ஆயிரம் கொடுத்தால் தான் உனக்கு உட்பிரிவு செய்து தர முடியும் என்று கட்டாயமாக கூறியுள்ளார்.
இதனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத முனியப்பன் திருச்சி லஞ்ச ஒழிப்பு துறையினரிடம் அளித்த புகாரின் பேரில் டிஎஸ்பி மணிகண்டன் தலைமையில் ஆய்வாளர்கள் சக்திவேல் பிரசன்ன வெங்கடேசன் பாலமுருகன் மற்றும் குழுவினரிடம் புகார் தெரிவித்தார். இந்நிலையில் இன்று முனியப்பனிடமிருந்து சர்வேயர் முருகேசன் ரூ 10 ஆயிரம் ரூபாய் லஞ்ச பணம் கிழக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து பெற்றபோது அங்கு மறைத்திருந்த லஞ்ச ஒழிப்பு துறையினர் சர்வேயர் முருகேசனை கையும் களவுமாக மடக்கி பிடித்தனர். இதன் தொடர்ச்சியாக திருச்சி கிழக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி மாவட்டத்தை பொருத்தவரையில் நிலங்கள் உட்பிரிவு செய்வது தொடர்பாக நில அளவையர்கள் தங்களிடம் வரும் பொதுமக்களிடம் ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு தொகை என நிர்ணயம் செய்து இடைத்தரகர்கள் மூலம் லஞ்சம் பெற்று வருகிறார்கள் என்பது பொதுமக்கள் அளித்த பல புகார்களின் அடிப்படையில் தெரிய வருகிறது. பொதுமக்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டால் நில அளவையர்கள் யாரும் தொலைபேசியை எடுப்பதில்லை என்றும் இடைத்தரகர்களின் தொலைபேசிக்கு மட்டுமே தொடர்பு கொள்ள முடியும் என்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். அரசு துறையில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் பொதுமக்களுக்காக சேவை செய்யக்கூடியவர்கள். எந்த நிலையிலும் பொது மக்களிடம் லஞ்சம் பெறக் கூடாது என சட்டம் உள்ளது. ஆனால் கடந்த சில மாதங்களாக திருச்சி மாவட்டத்தில் இருக்கக்கூடிய அரசு அலுவலகங்களில் லஞ்சம் பெறுவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. இனிவரும் காலங்களில் அரசு துறையில் பணியாற்றும் அதிகாரிகள் அல்லது அலுவலர்கள் பொதுமக்களிடையே லஞ்சம் கேட்டால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அரசு அலுவலகங்களில் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் பொதுமக்கள் உடனடியாக லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளனர்.