கீழக்கரை: “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” என்னும் புதிய திட்டத்தில் மனு கொடுக்க போதுமான இட வசதி இல்லாததால் தள்ளுமுள்ளு !!..

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி அலுவலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிக்கப்பட்டுள்ள, “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” என்னும் புதிய திட்டத்தின் கீழ் மனுக்கள் வழங்குவதற்கு நகராட்சி அலுவலகத்தில் ஆண்கள் பெண்கள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு வழங்குவதற்கும் நீண்ட நேரம் காத்திருந்தனர். நகராட்சி அலுவலகத்தில் போதுமான இட வசதி இல்லாமல் மிகுந்த நெருக்கடியில் பொதுமக்கள் காணப்பட்டனர். மாவட்ட ஆட்சியர் நகராட்சி அலுவலகத்திற்கு வரும்பொழுது போதுமான வசதி இல்லாத காரணத்தினாலும் நகராட்சி நிர்வாகம் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் கூட வழங்காமல் தள்ளுமுள்ளு ஏற்பட்டு சில நேரம் சலசலப்பு ஏற்பட்டது. நகராட்சி அலுவலகத்துக்கு வருகை புரிந்த மாவட்ட ஆட்சித் தலைவர் முதலில் அதிகாரிகளோடு ஆலோசனைக் கூட்டத்தில் ஈடுபட்டார். நீண்ட நேரம் பொதுமக்கள் மனுக்கள் வைத்து காத்திருந்த பொழுது கவுன்சிலர்கள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட பொழுது கவுன்சிலர்கள் முறையாக செயல்பட்டால் நாங்கள் ஏன் மாவட்ட ஆட்சித் தலைவர் சந்திக்க வேண்டியுள்ளது என்று கேள்வி எழுப்பப்பட்டது. மாவட்ட ஆட்சித் தலைவரை பொதுமக்கள் சந்திக்கும் பொழுது ஒரு சில நகராட்சி கவுன்சிலர்களுக்கு அங்கு என்ன வேலை அவர்கள் மனு கொடுக்க வந்தால் மனு கொடுத்துவிட்டு செல்லலாமே என்று கேள்விகள் எழுப்பப்பட்டு வந்தன. இதனை அறிந்த மாவட்ட ஆட்சியர் கீழக்கரை தாசில்தார் இடம் கூறி மனுக்களை பெற சொன்னார். மனுக்களை பெற்ற தாசில்தார் பழனி குமார் மாவட்ட ஆட்சியரிடம் மனுக்களை ஒப்படைத்தார் அதனை பார்வையிட்டு உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார். மேலும் சில பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு வழங்குவோம் என்று கூறியதால் மாவட்ட ஆட்சியர் அவர்களை சந்தித்து மனுக்களை பெற்று கோரிக்கைகளை கேட்டு அறிந்தார். நகராட்சி நிர்வாகம் பொதுமக்களுக்கு முறையாக இட வசதிகள் அமைத்துக் கொடுக்காமல் இருந்தது கண்டிக்கத்தக்கது என்றும் கீழக்கரை நகரில் கூடுதலான பிரச்சனைகள் மற்றும் குறைபாடுகள் இருப்பதை மாவட்ட ஆட்சித் தலைவர் உணர்ந்து நகராட்சி நிர்வாகத்தின் மீதும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் மீதும் கூடுதல் கவனம் செலுத்தி பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.  இந்த ஆய்வில் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜுலு மாவட்ட கோட்டாட்சியர் கோபு கீழக்கரை வட்டாட்சியர் பழனி குமார் திருப்புல்லாணி வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேஸ்வரி கீழக்கரை நகராட்சி ஆணையர் செல்வராஜ் சுகாதார ஆய்வாளர் பரகத்துல்லா பொறியாளர் அருள் மற்றும் அரசு அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.