2ஜி ஊழல் வழக்கில்.. மீண்டும் திகார் சிறைக்கு செல்வார்கள் கனிமொழி, ஆ ராசா.. எடப்பாடி பழனிசாமி பேச்சு..!

ரோடு: 2ஜி வழக்கில் எம்பிக்கள் கனிமொழியும் ஆ ராசாவும் மீண்டும் சிறைக்கு செல்வார்கள் என ஈரோட்டில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் 4 முனை போட்டி நிலவுகிறது. அதிமுக சார்பில் கே.எஸ். தென்னரசுவும், திமுக கூட்டணி சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவனும், நாம் தமிழர் சார்பில் மேனகா நவநீதனும், தேமுதிக சார்பில் ஆனந்தும் போட்டியிடுகிறார்கள்.

தேர்தலுக்கு இன்னும் 8 நாட்களே உள்ளதால் பரப்புரை சூடு பிடித்துள்ளது. நாம் தமிழர் கட்சியின் சீமான், மேனகா நவநீதனை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டிருந்தார். அது போல் தேமுதிக துணை பொதுச் செயலாளர் சுதீஷ், விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் ஆகியோர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து திமுக அமைச்சர்கள் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அது போல் திமுக கூட்டணி கட்சியினரும், காங்கிரஸ் கட்சித் தலைவர் கே எஸ் அழகிரி, எம்பி கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். வரும் 24 ஆம் தேதி முதல்வர் ஸ்டாலினும் உதயநிதியும் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார்கள்.

அது போல் அதிமுக வேட்பாளரை ஆதரித்து முன்னாள் அமைச்சர்கள் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அது போல் கூட்டணி கட்சியை சேர்ந்த ஜிகே வாசன், நயினார் நாகேந்திரன் ஆகியோரும் பிரச்சாரம் செய்தனர். மேலும் கே.எஸ் . தென்னரசுவை ஆதரித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்.

அவர் ஈரோடு கருங்கல்பாளையத்தில் நடந்த பிரச்சார கூட்டத்தில் கூறுகையில் தோல்வி பயம் காரணமாக ஆடு, மாடுகளை அடைத்து வைப்பது போல் வாக்காளர்களையும் திமுகவினர் அடைத்து வைத்துள்ளனர். அவர்களுக்கு பணத்தாசை காட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.

திமுகவினருக்கு தெம்பு, திராணி இருந்தால் வாக்காளர்களை அடைத்து வைக்காமல் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிக்க வேண்டும். ஜனநாயகத்தை குழித் தோண்டி புதைக்கும் கட்சி திமுக. ஆட்சிக்கு வந்தது முதல் ஒரு திட்டத்தையாவது திமுக நிறைவேற்றியுள்ளதா என வாக்கு சேகரிக்க வரும் அமைச்சர்களிடம் கேள்வி கேளுங்கள்.

திமுகவை பொருத்தமட்டில் தலைமைக்கு யார் அதிகம் கப்பம் கட்டுகிறார்களோ அவர்களே சிறந்த அமைச்சர் என புகழாரம் செய்யப்படுகிறார்கள். திமுக ஆட்சிக்கு வந்த 21 மாதங்களில் அமைச்சர்கள் கொள்ளை அடித்ததுதான் மிச்சம். மக்கள் மீது வரியை சுமத்திவிட்டு திராவிட மாடல் ஆட்சி என சொல்கிறார்கள். அதிமுக ஆட்சியில் கொரோனாவை எதிர்கொண்டு மக்கள் உயிரை காப்பதில் தமிழகம் முதலிடத்தில் இருந்தது.

சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் பொய் சொல்லாத நாளே இல்லை. எங்கும் நின்று வாக்கு கேட்டால் மக்கள் கேள்வி கேட்பார்கள் என்பதால் திமுகவினர் ஓடிக் கொண்டே இருக்கிறார்கள். கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச்சம்பவங்கள் குறித்து முதல்வர் கண்டு கொள்வதே இல்லை. சட்டம் ஒழுங்கை கவலைப்படாத பொம்மை முதல்வர் தமிழ்நாட்டை ஆட்சி செய்து வருகிறார். திமுக ஆட்சியில் கட்டுமான பொருட்களின் விலை உயர்வால் இனி கனவில்தான் வீடு கட்ட முடியும்.

வாக்குறுதிகளை மறந்த ஸ்டாலினுக்கு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் ஒரு எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஸ்டாலினுக்கு மக்கள் ஒரு வாய்ப்பு வழங்கினர். ஆனால் அவர் அதை தக்க வைத்து கொள்ளவில்லை. மக்களும் தாம் வாய்ப்பு வழங்கியது தவறு என புரிந்து கொண்டார்கள். 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த கனிமொழி, ராசா ஆகியோர் சிறை சென்றனர். அந்த வழக்கு தற்போது மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த வழக்கில் அவர்கள் ஏற்கெனவே இருந்த திகார் சிறைக்கு மீண்டும் செல்வார்கள் என எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருந்தார்.