புது தில்லி: நீதிமன்றங்களில் உள்ளூர் மொழிகள் பயன்படுத்துவதை ஊக்குவிக்க வேண்டும் என்று நீதித்துறையை பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
தில்லியில் அனைத்து மாநில முதல்வர்கள் மற்றும் அனைத்து உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் பங்கேற்கும் மாநாடு இன்று நடைபெற்றது. இந்த மாநாடு 6 ஆண்டுகளுக்கு பின் நடைபெறுகிறது. இம்மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கிவைத்து உரையாற்றினார்.
முதல்வர்கள் மற்றும் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளின் கூட்டு மாநாட்டில் இன்று உரையாற்றிய பிரதமர் மோடி, நீதிமன்றங்களில் உள்ளூர் மொழிகளை அறிமுகப்படுத்துவதன் அவசியத்தை அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார். இது மக்களை நீதித்துறை அமைப்புடன் இணைக்கிறது என்று கூறினார்.
நீதிமன்றங்களில் உள்ளூர் மொழிகளை ஊக்குவிக்க வேண்டும். இது நீதி அமைப்பில் சாதாரண குடிமக்களின் நம்பிக்கையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், அவர்கள் அதனுடன் இணைந்திருப்பதை உணருவார்கள் என்று பிரதமர் கூறினார்.
மேலும், குடிமக்களுக்கு அதிகாரம் அளிக்கும் டிஜிட்டல் நீதித்துறையின் அவசியத்தையும் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
குடிமக்களை வலுப்படுத்த, தொழில்நுட்பம் ஒரு முக்கிய கருவியாக மாறியுள்ளது. அதேபோல், நமது நீதித்துறை உள்கட்டமைப்பும் டிஜிட்டல் மயமாக்கப்பட வேண்டும். நாட்டின் வளர்ச்சியுடன் டிஜிட்டல் இந்தியாவை ஒருங்கிணைப்பதில் தொழில்நுட்ப நட்பு மனித வளங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்று பிரதமர் மோடி பேசினார்.
ஆன்லைன் பணப்பரிவர்த்தனை குறித்து பேசிய பிரதமர், இன்று சிறிய நகரங்கள் மற்றும் கிராமங்களில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் சர்வசாதாரணமாகி வருகின்றன. கடந்த ஆண்டு உலகில் நடந்த அனைத்து டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் 40 சதவீதம் இந்தியாவில்தான் நடந்துள்ளது என்றார்.
மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜு, இந்திய தலைமை நீதிபதி என்.வி.ரமணா, தில்லி முதல்வர் அரவிந்த் கெஜரிவால், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல், அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, அருணாச்சல பிரதேச முதல்வர் பெமா காண்டு, மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மா மற்றும் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.