தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்குகளிலிருந்து விலகப் போவதில்லை – நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உறுதி..!

தலைமை நீதிபதி அனுமதி பெற்ற பிறகே தான் அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக தாமாக முன்வந்து வழக்குகளை விசாரணைக்கு எடுத்துள்ளேன்.

தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்குகளிலிருந்து விலகப்போவதில்லை என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

திமுகவின் கடந்த ஆட்சி காலமான 2006 முதல் 2011ம் ஆண்டில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மற்றும் அவரது மனைவி ஆதிலட்சுமி உள்ளிட்டோருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறை, 44 லட்சத்து 56 ஆயிரத்து 67 ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக வழக்கு பதிவு செய்திருந்தது. கடந்த 2012ம் ஆண்டு பதியப்பட்ட இந்த வழக்கும், ஸ்ரீவில்லிபுத்தூரில் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த நிலையில், ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் சில வருவாய் ஆதாரங்களை கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை எனக் கூறியும், 28 வருவாய் விவரங்களை கடந்த 2016-ஆம் ஆண்டு தாக்கல் செய்து, தன்னை இந்த வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுவை ஏற்று அவர்களை விடுவித்து கடந்த ஜூலை மாதம் உத்தரவிடப்பட்டது.

இதேபோல அதே ஆண்டு காலத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு, வருமானத்துக்கு அதிகமாக 76 லட்சத்து 40 ஆயிரத்து 433 ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை, அவர் மீதும், அவரது மனைவி மணிமேகலை மீதும் வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு சுமார் 10 ஆண்டுகள் நடைபெற்று வந்த நிலையில். அரசியல் காரணங்களுக்காக கடந்த அதிமுக ஆட்சியில் வழக்கு தொடர்ந்ததாகவும் எனவே, சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்த மனுவை ஏற்று, அவரையும், அவரது மனைவி மணிமேகலையையும் வழக்கில் இருந்து விடுவித்து கடந்த 2022ம் ஆண்டு ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில் இந்த இரு உத்தரவுகளையும் எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் மேல் முறையீடு செய்யாததால், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன்வந்து சீராய்வு மனுக்களை விசாரணைக்கு எடுத்துள்ளார். இந்த வழக்கு தொடர்பாக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ.எஸ்.ஆர்.ராமசந்திரன் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்திருந்தார்.

இந்த வழக்குகள் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதியே இந்த வழக்கை விசாரிக்கக்கூடாது. அதேபோல், அமைச்சர் தங்கம் தென்னரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏ.ரமேஷ் நீதிமன்றத்தின் கவனத்துக்கு வரக்கூடிய ஒரு விஷயத்தை தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தால், அதை எந்த நீதிபதி விசாரிப்பது என்பது குறித்து தலைமை நீதிபதி தான் முடிவு செய்ய வேண்டும் என்றார்.

அதற்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் லைமை நீதிபதி அனுமதி பெற்றுதான் தாமாக முன்வந்து வழக்குகளை விசாரணைக்கு எடுத்துள்ளேன். எந்த வழக்கின் விசாரணையிலிருந்தும் விலகப்போவதில்லை. வேண்டும் என்றால், இந்த வழக்குகள் குறித்து உச்ச நீதிமன்றத்தை நாடி நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என்று கூறி அமைச்சர்களை அலறவிட்டார். இதனையடுத்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மீதான வழக்கை நவம்பர் 2-ம் தேதிக்கும், அமைச்சர் தங்கம் தென்னரசு மீதான வழக்கை நவம்பர் 9-ம் தேதிக்கும் ஒத்தி வைத்தார்.