திருச்சி மாவட்டம் மணிகண்டம் அருகே உள்ள அலுந்தூரில் ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுகள் பாய்ந்ததில் 38 பேர் காயமடைந்தனர்.திருச்சி மாவட்டம், மணிகண்டம் அடுத்த நாகமங்கலம் அருகே உள்ள அழுந்தூரில் ஜல்லிக்கட்டு போட்டி நேற்று நடைபெற்றது. ஜல்லிக்கட்டு போட்டியை காலை 8.05 மணிக்கு
ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர் தட்சிணாமூர்த்தி தொடங்கி வைத்தார். இந்த ஜல்லிக்கட்டு போட்டி மாலை 4.30 மணி வரை நடைபெற்றது. இந்த ஜல்லிகட்டு போட்டியில் கலந்து கொள்வதற்காக திருச்சியை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளிலிருந்தும், பக்கத்து மாவட்டங்களைச் சேர்ந்த பகுதியிலிருந்தும 827 ஜல்லிக்கட்டு காளைகள் அழைத்து வரப்பட்டன. அதேபோல் 278, மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். மாடுபிடி வீரர்கள் ஒவ்வொரு குழுவாக மைதானத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். வாடி வாசலில் இருந்து ஒவ்வொரு காளையாக அவிழ்த்து விடப்பட்டது. காளைகளின் திமிலை வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர். மைதானத்தில் ஒரு சில காளைகளுடன் வீரர்கள் மல்லுக்கட்டினர். அப்போது வீரர் ஒருவரை காளை புரட்டிப்போட்டது. நேராக முட்டப்பாய்ந்த காளையை மாடுபிடிவீரர் எதிர்த்து நின்று லாவகமாக மாட்டின் கொம்பை இறுகப்பிடித்து திமிலை அடக்க முயன்றார். அப்போது பார்வையாளர்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். இது மாடுபிடி வீரர்களை மேலும் உற்சாகப்படுத்தியது. மைதானத்தில் வீரர்களை மிரட்டிய காளையை அதன் உரிமையாளரான சிறுமி ஒருவர் வந்து விரட்டி விட்டார். எல்லைக்கோட்டை தாண்டிய காளையை உரிமையாளர் பாசக்கயிறை கழுத்தில் மாட்டி அழைத்துச் சென்றார். போட்டியின் போது மாடுகளை அடக்கிய வீரர்களுக்கு போட்டியாளர்களால் ஒலிப்பெருக்கி மூலம் பரிசுகள் அறிவிக்கப்பட்டு அப்போதே வழங்கப்பட்டது. அதேபோல் பிடிபடாத காளைகள் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டு அதற்குரிய பரிசுகளை காளைகளின் உரிமையாளரிடம் வழங்கினர். ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் குக்கர், சைக்கிள், ட்ரெஸ்ஸிங் டேபிள், ரொக்கம் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டது. முன்னதாக இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ளும் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு போதை மருந்து ஏதேனும் கொடுக்கப்பட்டுள்ளதா அல்லது ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ள தகுதி உடையதாக இருக்கிறதா என மாவட்ட கால்நடை இணை இயக்குனர் மும்மூர்த்தி தலைமையிலான மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்து சான்றளித்த பின்னரே காளைகள் வாடிவாசலுக்குள் அனுமதிக்கப்பட்டது. அதேபோல் மாடு பிடி வீரர்களும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் மாடு பாய்ந்ததில் மாட்டின் உரிமையாளர்கள் 14 பேர், பார்வையாளர்கள் 6 பேர், மாடுபிடி வீரர்கள் 18 பேர் என 38 பேர் காயமடைந்தனர். மாடுகள் பாய்ந்ததால் காயம் அடைந்தவர்களுக்கு மணிகண்டம் வட்டார மருத்துவ அலுவலர் அமிர்தா தலைமையிலான மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். இதில் மாட்டின் உரிமையாளர்கள் 2 பேர், பார்வையாளர்கள் 3 பேர் மாடுபிடி வீரர்கள் 3 பேர் என மொத்தம் 8 பேர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த ஜல்லிக்கட்டு போட்டியை முன்னிட்டு திருவெறும்பூர் டிஎஸ்பி அறிவழகன் தலைமையில் சுமார் 185 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0