திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகில் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த கோரி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் 229 பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த 2003 ஏப்ரல் 1 ஆம் தேதிக்கு பிறகு அரசு பணியில் சேர்ந்தோருக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண்விடுப்பு ஒப்படைப்பு, உயா் கல்விக்கான ஊக்க ஊதிய உயா்வை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா்கள் கூட்டமைப்பு ( ஜாக்டோ -ஜியோ) சாா்பில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத நிலையில், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, ஜாக்டோ -ஜியோ அமைப்பினா் ஆா்ப்பாட்டம் மேற்கொண்டனா். ஜாக்டோ – ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் சே. நீலகண்டன், கோ. நாகராஜன், கா.உதுமான் அலி, மா.குமாரவேல், முனைவா் கா.பால்பாண்டி ஆகியோா் தலைமை வகித்தனா். தமிழ்நாடு உயா்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா்கள் சங்க மாநில ஒருங்கிணைப்பாளா் பொ. அன்பரசன் போராட்டத்தை தொடங்கிவைத்து பேசினாா். சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவா் ஆ.பெரியசாமி உள்ளிட்டோா் போராட்டம் குறித்துப் பேசினா். மாவட்ட ஒருங்கிணைப்பாளா் சி.அ. பாபு வரவேற்றாா். மாவட்ட நிதி காப்பாளா் சி.ஆரோக்கியராஜ் நன்றி கூறினாா். ஆா்ப்பாட்டத்தைத் தொடா்ந்து திடீரென ஆட்சியரகம் முன்பு சாலையில் அமா்ந்து சாலை மறியல் போராட்டம் மேற்கொண்டனா். இதையடுத்து, 71 பெண்கள் உள்ளிட்ட 229 பேரை போலீஸாா் கைது செய்தனா். ஆசிரியர்கள் போராட்டத்தினால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பரபரப்பாக காணப்பட்டது.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0