அப்போது, காஞ்சி தந்த வள்ளுவன் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளான இன்று – அவரை தந்த தாய் மடியாம் கலைமிகு காஞ்சி மாநகருக்கு நான் வருகை தந்துள்ளேன். என்னுடைய அரசியல் பயணத்திற்கு எத்தனையோ உந்து சக்திகள் இருக்கலாம். அனைத்திற்கும் சிகரம் வைத்தாற்போல் இருந்த உந்து சக்தி எது என்று கேட்டால், இந்தக் காஞ்சி நகரம்தான். அந்த நகரில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை தொடங்கி வைப்பது என் வாழ்நாளில் கிடைத்தற்கரிய வாய்ப்பாகக் கருதுகிறேன்.
தாய் தமிழ்நாட்டுக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டிய பேரறிஞர் அண்ணா – இனி இந்தப் பெயரை யாராலும் நீக்க முடியாது. இந்தப் பெயரை நீட்டிக்கும் காலமெல்லாம் இந்த நாட்டை அண்ணாத்துரை தான் ஆள்கிறான் என்று குறிப்பிட்டார்கள். இன்றைக்கு கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் படி இன்று எத்தனை ஆண்டுகளுக்கு பெண்கள் ஆயிரம் ரூபாய் பெறுவார்களோ அத்தனை ஆண்டுக்கும் இந்த ஸ்டாலின் தான் ஆள்கிறான். * மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து வசதியைத் தரும் விடியல் பயண திட்டத்தை உருவாக்கும் நாளில் – * பள்ளிக்கு பசியோடு வரும் பிள்ளைகளுக்கு காலை உணவுத் திட்டத்தை உருவாக்கிய நாளில் – * அரசு பள்ளியில் படித்து உயர்கல்வி கற்க வரும் மாணவியருக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் புதுமைப் பெண் திட்டம் தொடங்கிய நாளில் * நான் முதல்வன் திட்டம் தொடங்கிய நாளில் நான் எவ்வளவு மகிழ்ச்சியை அடைந்தேனோ – அதே மகிழ்ச்சியை – இன்னும் சொன்னால் அதை விட அதிக மகிழ்ச்சியுடன் இங்கு நான் நின்று கொண்டிருக்கிறேன்.தினமும் உதிக்கும் உதயசூரியன் உங்களுக்கு புத்துணர்ச்சியைக் கொடுப்பதைப் போல – உதயசூரியனின் ஆட்சியும் உங்களுக்கு தினந்தோறும் புத்துணர்ச்சியை வழங்க இந்த ஆயிரம் ரூபாய் பயன்படப்போகிறது. திமுக தனது தேர்தல் அறிவித்த வாக்குறுதி இது. அளித்த வாக்குறுதிகளில் மிக முக்கியமான வாக்குறுதி இது. இப்படி ஒரு திட்டத்தை அறிவித்ததும் – இது நிறைவேற்ற முடியாத வாக்குறுதி என்று சொன்னார்கள்.
பொய்யான வாக்குறுதியைக் கொடுத்து திமுக, மக்களை ஏமாற்றிவிட்டது என்று சொன்னார்கள். இவர்களால் தர முடியாது என்று சொன்னார்கள். ஆட்சிக்கு வந்ததும் கொடுத்திருப்போம். ஆனால் நிதி நிலைமை சரியாக இல்லை.
எனவே, நிதி நிலைமையைச் சரி செய்து விட்டு – இப்போது கொடுக்கிறோம். இதனைச் சிலரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. பொய் வதந்திகளையும் கிளப்பி இந்த திட்டத்தை முடக்க நினைத்தார்கள் சிலர். அறிவித்துவிட்டால், எதையும் நிறைவேற்றிக் காட்டுவான் இந்த ஸ்டாலின் தமிழ்நாட்டு மக்களாகிய நீங்கள் நன்கு அறிவீர்கள்.
சொன்னதைச் செய்வான் கலைஞரின் மகன் என்பதற்கு சாட்சியாக இந்த விழா காஞ்சிபுரத்தில் மட்டுமல்ல – தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டு மக்கள், எங்கள் கூட்டணி சின்னத்தை அமுக்கியதால் தான் நான் இந்த நாற்காலியில் அமர்ந்திருக்கிறேன். அந்த உரிமையைக் கொடுத்தவர்கள் நீங்கள் தான். மக்கள் கொடுத்த வாய்ப்பை மக்களுக்கே நான் பயன்படுத்துகிறேன்.
ஒன்று முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான அரசுப் பள்ளி ஆசிரியர்களாக, மகளிரை நியமனம். • டாக்டர் முத்துலட்சுமி நினைவு மகப்பேறு உதவித்திட்டம், • மூவலூர் இராமாமிர்தம் நினைவு திருமண உதவித்திட்டம், • டாக்டர் தருமாம்பாள் கைம்பெண் மறுமணத் திட்டம், • அஞ்சுகம் அம்மையார் நினைவு கலப்புத் திருமண உதவித்திட்டம், • ஈ.வெ.ரா. மணியம்மையார் நினைவு ஏழைக் கைம்பெண்களின் மகள்களுக்கான திருமண உதவித்திட்டம் இப்படி எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்து மகளிர் முன்னேற்றத்திற்கு வழிவகை செய்தவர் தலைவர் கலைஞர் அவர்கள். அவர் பெயரால் மகளிர் உரிமைத் திட்டம் செயல்படுவது மிகமிகப் பொருத்தமானதே.
உங்கள் கனவுகளை நிறைவேற்றும் ஆட்சி இது. உங்கள் கவலைகளைப் போக்கும் ஆட்சி இது. தொல்லை, இனி இல்லை. வானமே உங்களது எல்லை!” என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.