கோவையில் கல்வி நிறுவன அதிபரை தேர்தலில் களமிறக்குகிறாரா கமல்?…

கோவை: நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் கோவை தொகுதியை எதிர்பார்க்கும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், தனக்கு பதில் கல்வியாளர் அனுஷா ரவியை தேர்தலில் களமிறக்கும் யோசனையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. திமுக கூட்டணியில் இணைவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வரும் திங்கள்கிழமை அன்று மநீம தலைவர் கமல்ஹாசன் வெளியிடுவார் எனத் தெரிகிறது. தென் சென்னை, கோவை ஆகிய 2 மக்களவைத் தொகுதிகளை திமுகவிடம் மநீம எதிர்பார்க்கும் நிலையில், தலைநகரில் உள்ள தொகுதியை கொடுக்க திமுக முன்வரத் தயாராக இல்லை. இதனால் கோவை நாடாளுமன்றத் தொகுதி மக்கள் நீதி மய்யத்துக்கு ஒதுக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதில் கடைசி நேர மாற்றங்கள் திமுக தலைமை எடுக்கும் முடிவுக்கு உட்பட்டது.

ஒரு வேளை மநீமவுக்கு கோவை நாடாளுமன்றத் தொகுதியை திமுக கொடுக்கும் பட்சத்தில் அங்கு கமல்ஹாசனே போட்டியிடுவாரா அல்லது தனது கட்சி சார்பில் வேட்பாளரை நிறுத்துவாரா என்ற விவாதமும் எழுந்துள்ளது. இதனிடையே மக்கள் நீதி மய்ய பிரச்சார குழு மாநிலச் செயலாளரும், கல்வி நிறுவனங்களின் அதிபருமான அனுஷா ரவியை கமல் தேர்தலில் களமிறக்கக் கூடும் எனத் தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்காவில் படித்தவர், தேர்தல் செலவுக்கு அஞ்சாதவர், கல்வியாளர், என பரிமாணங்களை கொண்டவர் அனுஷா ரவி. கடந்த சட்டமன்றத் தேர்தலின் போதே திருப்பூரில் போட்டியிட்டு திமுக, அதிமுகவுக்கு டஃப் கொடுத்தவர். இதனால் கோவையில் இவர் களமிறக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. சட்டமன்றத் தேர்தல் தோல்விக்கு பிறகு மக்கள் நீதி மய்யத்திலிருந்து பல முன்னணி நிர்வாகிகள் ஓட்டம் பிடித்த நிலையில், கமல்ஹாசன் மீதுள்ள நம்பிக்கை காரணமாக தொடர்ந்து மநீமவில் பயணித்து வருபவர் அனுஷா ரவி. திமுக, அதிமுகவினரை போல் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளையும் கோவை, திருப்பூர் மாவட்டங்கள் நடத்தி வருகிறார். இதனிடையே திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மீண்டும் கோவை தொகுதி ஒதுக்கப்படுவது கடினம் எனத் தெரிகிறது.