இந்தியாவில் ஹைட்ரஜன் எரிபொருள் பேருந்து அறிமுகம் !!

இந்தியாவில் மக்கள் தொகை அதிகரிப்பை விட எரிபொருள் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதனை கட்டுப்படுத்தவும், மக்களின் சொகுசான வாழ்க்கையை உறுதி செய்யவும் பல்வேறு திட்டங்களையும், முயற்சிகளையும் மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. பொது போக்குவரத்தின் தேவை அதிகரிக்கும் அதே வேளையில் பெட்ரோல், டீசல் போன்ற எரி பொருட்களின் பயன்பாடும் அதிகரித்து வருகிறது.

பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்கள் அரபு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. இதன் பெரும் பகுதி கச்சா எண்ணெய் கொள்முதலுக்கு செலவிடப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. போக்குவரத்து வாகனங்களில் இருந்து வெளியேறும் புகையால் சுற்றுச்சூழலும் வெகுவாக மாசடைகிறது. டீசலில் இயக்கப்படும் ஒரே ஒரு பேருந்து ஆண்டுக்கு சராசரியாக 100 டன் கார்பன் டை ஆக்சைடை வெளியிடுகிறது. இதனால் மனிதர்கள் சுவாச கோளாறு போன்ற நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். சமீபகாலமாக மத்திய அரசு மின்சார வாகனங்களை பயன்படுத்த மக்களுக்கு அறிவுறுத்தி வருகிறது. இந்நிலையில் ஹைட்ரஜன் எரிவாயுவில் இயங்கும் பேருந்தை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் புனேவில் தொடங்கி வைத்துள்ளார்.

இந்த பேருந்தில் பொருத்தப்பட்டுள்ள எரிவாயு செல் ஹைட்ரஜன் மற்றும் காற்றை பயன்படுத்தி மின்சாரத்தை தானே தயாரித்து அதன் மூலமாக பேருந்தை இயக்கிக் கொள்ளும். இந்த ஹைட்ரஜன் பேருந்தால் தண்ணீரும் , காற்றும் மாசுபடுவதில்லை. சுற்றுச்சூழல் பாதிப்பு அடையாது. அதை விட முக்கியமான விஷயம் டீசலைக் காட்டிலும் இதன் செலவும் மிக குறைவு. இதனால் இந்தியாவில் இனி வரும் காலங்களில் பொதுப் போக்குவரத்தில் ஹைட்ரஜன் பேருந்துகள் பெரும் பங்கு வகிக்கும் எனத் தெரிவித்துள்ளார்.