புதுடெல்லி: மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்த நிலையில், அது பாலின நீதிக்கான புரட்சிகர மாற்றம் என்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார்.
விஞ்ஞான் பவனில் நடைபெற்ற ஆசிய பசிபிக் தேசிய மனித உரிமை நிறுவனங்களின் மாநாட்டை நேற்று தொடங்கி வைத்த அவர் இதுகுறித்து மேலும் கூறியதாவது:
புதிய நாடாளுமன்றத்தில் முதல் மசோதாவாக மகளிர் இடஒதுக்கீடு மசோதா செவ்வாய்க்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது. உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு குறைந்தபட்சம் 33 சதவீத இடஒதுக்கீட்டை உறுதி செய்துள்ளோம். மிகவும் இனிய செய்தியாக, மாநில சட்டப்பேரவைகள் மற்றும் தேசிய நாடாளுமன்றத்திலும் மகளிருக்கான இடஒதுக்கீடானது இப்போது வடிவம் பெறுகிறது. இது பாலின நீதிக்கான நமது காலத்தின் மிகவும் புரட்சிகரமான மாற்றமாக இருக்கும்.
இவ்வாறு குடியருசுத் தலைவர் திரவுபதி முர்மு கூறினார்.
ஆசிய பசிபிக் மன்றத்துடன் இணைந்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் (என்எச்ஆர்சி) இந்த மாநாட்டுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இதில், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து 1,300-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.